வால்மீகி எழுதிய ராமாயணம் கதையை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பட்ஜெட்டில் மோஷன் கேப்சருடன் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வந்தப் படம் ‘ஆதிபுருஷ்’. இந்தப் படத்தில் ராமராக நடிகர் பிரபாஸும், ராவணனாக சயீஃப் அலிகானும், சீதாவாக கீர்த்தி சனானும், ராமரின் சகோதரர் லக்ஷமனாக சன்னி சிங்கும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், வரும் 16-ம் தேதி 5 மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் 2டி, 3டி மற்றும் ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியிட இருந்த நிலையில், தற்போது ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஏனெனில், ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படத்தை மாற்றுவதற்கான பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘The Flash’ திரைப்படமும் அதே நாளில் வெளியாவதால், அப்பட தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளை ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பதாலும், ‘ஆதிபுருஷ்’ ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகாது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிரபாஸின் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். முழுவதுமாக கிராபிக்ஸ் பணிகளால் உருவான இந்தப் படத்தை ஐமேக்ஸ் வடிவத்தில் பார்க்கும்போது, அதன் அனுபவம் நன்றாக இருக்கும். ஆனால், தற்போது அதில் ‘ஆதிபுருஷ்’ வெளியாகவில்லை என்ற தகவலால் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.