அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமான அனுமனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக படக்குழு கூறியுள்ளது. ராமாயணத்தின் ஒரு பகுதியை 'ஆதிபுருஷ்' என்ற பெயரில் இயக்கியுள்ளார் ஓம் ராவத். ராமபிரானாக பிரபாஸ் நடித்துள்ள இந்தத் திரைப்படம், 3டி தொழில்நுட்பத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வரும் 16 ஆம் தேதி வெளியாகிறது.
ஆதிபுருஷ் படம் வெளியாவதை முன்னிட்டு நடிகர் பிரபாஸ் திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். இன்று காலை வைகுந்தம் வரிசை வளாகம் வழியாக பாரம்பரிய உடையில் பிரபாஸ் கோயிலுக்குள் நுழைந்தார். கோயில் நிர்வாகிகள் பிரபாஸை வரவேற்று தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். சுப்ரபாத சேவையில் பங்கேற்ற பிரபாஸ், ஏழுமலையானை சுவாமியை தரிசனம் செய்தார்.
தரிசனத்திற்குப் பிறகு, கோயிலின் ரங்கநாயகர்களின் மண்டபத்தில் பண்டிதர்கள் வேத ஆசிர்வாதங்களை வழங்கினர். அவருக்கு, கோயில் நிர்வாகிகள் பட்டு வஸ்திரம் அணிவித்து, சுவாமி தீர்த்த பிரசாதம் வழங்கினர். பழம்பெரும் கதைகளின் பின்னணியில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ் திரைப்படத்தின் (ப்ரீ ரிலீஸ்) வெளியீட்டிற்கு முன்னதான விழா திருப்பதியில் உள்ள தாரகராம மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், திருமலையில் பிரபாஸ் இருப்பதாக தகவல் கிடைத்ததும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திருமலைக்கு வந்து சேர்ந்தனர். பிரபாஸுடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.