UPDATE: பூனம் பாண்டே உயிரிழக்கவில்லை.. பொய் சொல்லி ஏமாற்றியது ஏன்? வீடியோ வெளியிட்டு விளக்கம்!

“நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு இல்லை. ஆனால், இந்த நோயை எப்படி கையாளுவது என்று தெரியாமல் ஆயிரக்கணக்கான பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்"
poonam pandey
poonam pandeypt
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த நடிகை பூனம் பாண்டே கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நாஷா எனும் பாலிவுட் படத்தின் மூலம் திரைத்துறையில் என்ட்ரி ஆனார். அதனைத்தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கான ஃபாலோவர்களையும் கொண்டுள்ளார்.

இந்நிலையில், கர்ப்பப்பை புற்றுநோயால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் ஒருவர் நேற்று காலை தெரிவித்தார். அத்துடன் பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தாரால் பதிவிடப்பட்டது.

இதுதொடர்பான வெளியான தகவல்களில், நடிகை பூனம் பாண்டே ஏற்கெனவே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதனால், எக்ஸ் தளம் உட்பட சமூகவலைதளங்களில் பூனம் பாண்டேவுக்கு ‘RIP' என்று பதிவுகள் ட்ரெண்டாகின. அதேபோல், காலையில் அறிவிப்பு வெளியான பிறகு அவரது குடும்பத்தை தொடர்புகொள்ள முடியாமல் போனதால், மரணம் குறித்த அறிவிப்பில் குழப்பமும் நீடித்தது. அனைத்து ஊடகங்களும் பூனம் பாண்டே இறந்துவிட்டதாகவும், அதற்கு கர்ப்பப்பை புற்றுநோய்தான் காரணம் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில்தான், இன்று காலை புது வீடியோ ஒன்றை வெளியிட்டு நான் உயிருடன் தான் இருக்கிறேன் என்று கூறினார் பூனம் பாண்டே. அவர் வெளியிட்ட அந்த வீடியோவில், “நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு இல்லை. ஆனால், இந்த நோயை எப்படி கையாளுவது என்று தெரியாமல் ஆயிரக்கணக்கான பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய் வகைகளில், மற்றவற்றை போன்று கர்ப்பப்பை புற்றுநோய் குணப்படுத்த முடியாத விஷயமல்ல. முன்கூட்டியே பரிசோதனைகள், தடுப்பூசிகளால் இதனை கட்டுப்படுத்த முடியும்.

இதனால் யாரும் உயிரிழக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த புற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை அனைத்து பெண்களிடமும் கொண்டு சேர்ப்போம். மேலும், இந்த நோயை கட்டுப்படுத்துவது எப்படி என்பதை தெரிந்துகொள்ள எனது இன்ஸ்டா பயோவில் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “நான் உயிரிழந்துவிட்டேன் என்று கூறி உங்கள் அனைவரையும் காயப்படுத்தியதற்கு மன்னித்துவிடுங்கள். கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்தேன்” என்றுள்ளார்.

poonam pandey
“எனக்கான காலம் வரும்; அப்போது நிச்சயம் வருவேன்” - 15 வருட பக்கா ப்ளான்; அன்றே விஜய் சொன்னது இதுதான்!

தொடர்ந்து, “மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்கும் வகையில் தடுப்பூசி திட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்தேன். நான் கர்ப்பப்பை புற்றுநோயால் இறந்துவிட்டேன் என்ற தகவலுக்கு பிறகு கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட தலைப்புச் செய்திகளில் கர்ப்பப்பை புற்றுநோய் இடம்பெற்றிருந்தது.

அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்” என்று பதிவிட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க, விளம்பரத்திற்காகவே பூனம் பாண்டே இவ்வாறு செய்திருப்பதாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

poonam pandey
“அந்த அச்சம் இருக்கும்வரை..” - தமிழ்நாட்டு அரசியலின் அச்சாணி பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com