மேலும், இப்படி பதிவு செய்ததற்கு காரணத்தையும் அவர் கூறியுள்ளார். ஏன் அப்படி செய்தார் என்ற அவரது விளக்கத்தை முழுமையாக பார்க்கலாம்.
உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல நடிகை பூனம் பாண்டே, கர்ப்பப்பை புற்றுநோயால் உயிரிழந்ததாக, நேற்றைய தினம் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்று வெளியானது. அவரது குடும்பத்தார் ஒருவரும் இந்த தகவலை கூறியிருந்தார்.
இதற்கிடையெ, மீண்டும் குடும்பத்தாரை தொடர்புகொள்ள முயன்றபோது, அவர்கள் அனைவரது செல்ஃபோன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் அவர் உயிரிழந்துவிட்டார் என்ற தகவலில் சந்தேகம் நிலவியது.
இதற்கிடையே, பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து பதிவுகளை போட்டு வந்தனர். இந்த நிலையில்தான், ”நான் உயிரோடுதான் இருக்கிறேன்” என்று வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பூனம் பாண்டே.
அந்த வீடியோவில், “நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு இல்லை. ஆனால், இந்த நோயை எப்படி கையாளுவது என்று தெரியாமல் ஆயிரக்கணக்கான பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய் வகைகளில், மற்றவற்றை போன்று கர்ப்பப்பை புற்றுநோய் குணப்படுத்த முடியாத விஷயமல்ல. முன்கூட்டியே பரிசோதனைகள், தடுப்பூசிகளால் இதனை கட்டுப்படுத்த முடியும்.
இதனால் யாரும் உயிரிழக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த புற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை அனைத்து பெண்களிடமும் கொண்டு சேர்ப்போம். மேலும், இந்த நோயை கட்டுப்படுத்துவது எப்படி என்பதை தெரிந்துகொள்ள எனது இன்ஸ்டா பயோவில் பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் உயிரிழந்துவிட்டேன் என்று கூறி உங்கள் அனைவரையும் காயப்படுத்தியதற்கு மன்னித்துவிடுங்கள். கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, விழுப்புணர்வு ஏற்படுத்த இப்படியா பதிவிடுவது என்று அவரது ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.