‘பொன்னியின் செல்வன்’ படக் குழுவினர் தஞ்சையில் ரசிகர்களை சந்திப்பதாக இருந்த நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர்களிடையே கடந்த 70 ஆண்டுகளாக வரவேற்புப் பெற்று வரும் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்று புனைவு நாவலான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, அதேப் பெயரில் திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், பிரபு, ரகுமான், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, நிழல்கள் ரவி, சரத்குமார், ஷோபிதா, பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற 30-ம் தேதி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார். படம் வெளியாக இன்னும் 10 தினங்களே இருப்பதால் படக்குழுவினர் பட விளம்பரத்தை துவங்கியுள்ளனர். அதன்படி, தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் கதை என்பதால், முதல்கட்டமாக தஞ்சை ரசிகர்களை படக்குழுவினர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தங்களது ட்விட்டர் பக்கங்களில், தங்களது பெயர்களை மாற்றிய விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா தஞ்சை செல்வதையும் உறுதிப்படுத்தி ட்வீட் செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர், அடுத்ததாக கேரளா, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ஆடியோ மற்றும் இசை வெளியீட்டு விழா தஞ்சையில் நடக்க இருந்தநிலையில், அது ரத்தாகி சென்னையில் நடைபெற்றது. அதன்பிறகு சோழர்களின் தலைநகரமான தஞ்சையில் பட புரமோஷன் நிகழ்ச்சிகள் துவங்க இருந்தநிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்கால் அதுவும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.