இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடல் சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நாளை வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ரகுமான், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, ஷோபிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இளவரசர் அருள்மொழிவர்மன், முதலாம் ராஜராஜ சோழனாக அரியணை ஏறுவதற்கு முன் நடந்த சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நாவலான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் வசனங்களை எழுதியுள்ளார். இளங்கோ குமரவேல் மணிரத்னத்துடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் இணைந்து படத்தினை தயாரித்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘பொன்னி நதி’ நாளை வெளியிடப்படுகிறது. ராயப்பேட்டையில் உள்ள, எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் வெளியிடப்படுகிறது. இந்த வெளியீட்டு விழாவில் நடிகர் ஜெயம் ரவி கலந்துகொள்ள உள்ளதாக ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாடலை பாடியுள்ளார். இளங்கோ கிருஷ்ணன் பாடலை எழுதியுள்ளார்.
வாணர் குலத்தைச் சேர்ந்த வல்லவரையன் வந்திய தேவன், ஆடித் திங்கள் பதினெட்டாம் பெருக்கில், சோழ தேசத்தின் வீர நாராயண ஏரிக்கரை மீது குதிரைப் பயணம் மேற்கொண்டு வருவான். இங்குதான் ‘பொன்னியின் செல்வன்’ கதையே துவங்கும். சோழப்பேரரசின் மிகப்பெரிய வீர சரித்திரத்தில் பிற்காலத்தில் இடம்பெறப் போகிறோம் என்பது தெரியாமலேயே, வீர நாரயண ஏரியின் வசீகரத்தை கண்டுக்கொண்டே செல்வான். இதனை நினைப்படுத்தும் விதமாக வந்திய தேவன் குதிரையில் செல்வது போன்ற வடிவமைப்புடன் ஆடித் திருநாள் கொண்டாட்டம் என புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.