‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் - 1’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை, அதே பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார் மணிரத்னம். இவரது கனவுப் படமான இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், பிரபு, ரகுமான், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, நிழல்கள் ரவி, சரத்குமார், ஷோபிதா, பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவற்றுடன் ‘பொன்னி நதி’ ‘சோழா சோழா’ என இரண்டு பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள முதல் திரைப்படம் என்று கூறப்படுகிறது. சென்னையில் செப்டம்பர் 6-ம் தேதியும், ஹைதராபாத்தில் 8-ம் தேதியும் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இதில் சென்னையில் நடைபெறும் விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com