ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெளியாக வேண்டிய பல படங்கள் இன்னும் கிடப்பிலே இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் அண்மையில் ஜோதிகா நடிப்பில் உருவான ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஒடிடி இணையத்தில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும், சினிமா துறையில் சிலர் இந்த புது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்படம் முதன் முறையாக வருகின்ற 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. திருமணத்திற்கு பின்னர் சமூக சார்ந்த பிரச்னைகள் பேசும் கதைகளை தேர்வு செய்த வந்த ஜோதிகா, இந்தப் படத்திலும் அதே பாணியை பின்பற்றியிருக்கிறார். இம்முறை குழந்தை கடத்தல்களுக்கு எதிராக போராடும் வழக்கறிஞராக ஜோதிகா தோன்றுகிறார். அவரின் வயது முதிர்வும், சினிமா அனுபவமும் ஜோதிகாவை வழக்கறிஞர் கதாபாத்திரத்திற்கு கணக்கச்சிதமாக பொருந்த செய்திருக்கிறது.
எப்பொழுதுமே படத்தில் ஒரு கதாபாத்திரம் மேலோங்கி நிற்க வேண்டும் என்றால், அந்தக் கதாபாத்திரத்தை எதிர்க்கும் கதாபாத்திரத்தைச் சரியாக தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ. பிரெட்ரிக், ஜோதிகாவை எதிர்க்கும் கதாபாத்திரமாக நடிகர் பார்த்திபனை தேர்வு செய்துள்ளார். அதனால் நீதிமன்றத்தில் இருவருக்கும் இடையேயான விவாதக் காட்சிகள் நிச்சயம் ரசனை மிகுந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.l
பின்னணி இசையின் வீரியம் ட்ரெய்லரில் தெரியவில்லை. ஒரு திரில்லர் கலந்த ஜானராக படம் உருவாகியிருக்கலாம்.
பிள்ளைகளை பறிகொடுத்து விட்டுப் போராடும் மக்கள், அதை தனது அதிகார போதையால் அடக்கும் மேல் சமூகம், அதனை எதிர்த்து போராடும் ஜோதிகா என காட்சிகளின் போக்கிலேயே இது வீரியமிக்க விதை எனச் சொல்லிப்போகிறாள் இந்த பொன்மகள்.