பொங்கல் ரேஸ்: திடீரென விலகிய மாஸ் ஹீரோ படங்கள் - கோலிவுட்டில் ரூ.600 கோடி வருவாய் இழப்பு

பொங்கல் ரேஸ்: திடீரென விலகிய மாஸ் ஹீரோ படங்கள் - கோலிவுட்டில் ரூ.600 கோடி வருவாய் இழப்பு
பொங்கல் ரேஸ்: திடீரென விலகிய மாஸ் ஹீரோ படங்கள் - கோலிவுட்டில் ரூ.600 கோடி வருவாய் இழப்பு
Published on

தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை என்றாலே சினிமா ரசிகர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும், திரைத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கும் சிறப்பான நாள் என்றே சொல்லலாம். ஏனென்றால், ஒவ்வொரு ஆண்டும் இவ்விரு பண்டிகையின் போது ரிலீஸ் ஆகும் மாஸ் ஹீரோக்களின் படங்கள், அதன் ரசிகர்களையும், பார்வையாளர்களையும், வெகுவாகவே திரையரங்குகளுக்கு கவர்ந்திழுக்கும். அதன்மூலம், திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் மிகப் பெரும் லாபம் பார்ப்பர். இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு ஆண்டின் திரையுலக வெற்றியை, பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் திரைப்பட வசூலை வைத்துதான் தொடங்குவதாக தான் திரைத்துறையை சார்ந்தவர்கள் கருதுகிறார்கள். ஆனால், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொங்கல் ரேஸிலிருந்து மாஸ் ஹீரோக்கள் படங்கள் திரையரங்கில் வெளியிடுவதிலிருந்து பின்வாங்கிய நிலையில், கோலிவுட் திரையுலகம் வருவாய் இழப்பை அடைந்தது குறித்த சிறு தொகுப்பை இங்கு காணலாம்.

கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை யாரும் எதிர்பாராதவகையில் உருவாகியதால், பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் திரைக்கு வராமல் போனது ரசிகர்களையும், திரையரங்கு உரிமையாளர்களையும், ஏமாற்றம் அடையச் செய்தது. என்னதான் ஆண்டுதோறும் திரைப்படங்களை எடுத்து வெளியிட்டாலும், பொங்கல் பண்டிகையின்போது வெளியிடும் படங்களுக்கு நிகராக வசூலிக்கும் வசூலை, வேறு நாட்களில் ரிலீஸ் செய்யும்போது எடுக்க முடியாது என்று கூறுகிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். இதனால், இந்த ஆண்டு பொங்கலுக்கு மாஸ் ஹீரோக்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாததால், சுமார் 500 முதல் 600 கோடி ரூபாய் வரை ஒட்டுமொத்த வருவாய் இழப்பு  ஏற்பட வாய்ப்புள்ளதாக திரைப்பட தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பெரு நஷ்டத்திலிருந்து கோலிவுட் திரையுலகம் மீள்வதற்கு பல நாட்கள் ஆகும் என கலக்கம் தெரிவித்துள்ளனர் திரையுலகினர்.  

ஆண்டுமுழுவதும் விவசாயம் செழித்துவிளங்கி நல்ல மகசூல் கிடைப்பதற்காக, தை முதல் நாளை வணங்கி, விவசாயிகள் தங்களது விவசாயப் பயிர்களை வைத்து வழிபடுகின்றனரோ, அதேமாதிரிதான் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் பொங்கலில் வெளியாகும் படங்கள் நம்பிக்கை அளிக்கின்றன. நெல்லை ராம் முத்துராம் திரையரங்கின் உரிமையாளர் ராமசாமி ராஜா இதுபற்றி கூறுகையில், "பொங்கல் படங்கள் எப்போதுமே, அந்த ஆண்டு முழுவதும் திரையரங்குகளில் நல்ல அதிர்வை தூண்டும். பழங்காலத்திலிருந்தே பொங்கல் பண்டிகை நம் இதயத்திற்கு நெருக்கமானது. உதாரணமாக, புதிதாக திருமணமான தம்பதிகள் பொங்கலையொட்டி ரிலீஸ் ஆகும் படங்களுக்காக எங்களிடம் டிக்கெட்டுகளை முன்கூட்டியே கேட்டுவைப்பார்கள். தல பொங்கலை (திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் பொங்கல் பண்டிகை) கொண்டாட எங்கள் திரையரங்கை விரும்புவார்கள். நாங்களும், குடும்ப பார்வையாளர்களுக்கு என்று தனி சீட் வரிசை அமைத்து தருவோம். 

இதனால், அவர்கள் திரையரங்குகளில் எவ்வித இடையூறும் இன்றி படம் பார்ப்பார்கள். இது எங்களது கலாச்சாரத்தின் ஒரு பகுதியும் கூட. ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்த பொங்கலுக்கு புதுமணத் தம்பதிகளிடமிருந்து அத்தகைய கோரிக்கை வரவில்லை. இதனால் இந்த ஆண்டு ஒரு மோசமான தொடக்கமாக உணர்கிறேன்" என கூறியுள்ளார். ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் நடிகர் அஜித்தின் ‘வலிமை’ ஒருவேளை கொரோனா அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் வெளியிடப்பட்டிருந்தால், பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்திருக்கும் என்றும், இந்த இரு படங்களும் இணைந்து குறைந்தது ரூ. 350-400 கோடி வருமானம் ஈட்டியிருக்கும் என்று கோலிவுட் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கருதுகிறார்கள். 

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட்டின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஸ்ரீராம் தெரிவிக்கையில், “விஜய்யின் ‘மாஸ்டர்’ தமிழகத்தில் சுமார் ரூ.160 கோடி வசூலித்தது. ‘பாகுபலி 2’ படமும் ரூ.180 கோடி வசூல் செய்தது. நான் வசூல்ரீதியில், ‘வலிமை’யை ‘மாஸ்டர்’ திரைப்படத்துடனும் மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை ‘பாகுபலி 2’ உடன் ஒப்பிடுவேன். இந்த இரண்டு படங்களும் எளிதாக ரூ. 350 கோடி வசூலித்திருக்கும். இது வெறும் டிக்கெட் விற்பனை மட்டுமே. உணவு, பானங்கள் விற்பனை மற்றும் பார்க்கிங் ஆகியவற்றைச் சேர்த்தால், இந்த எண்ணிக்கை ரூ.600 கோடி வரை உயரும்.  ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘வலிமை’ இரண்டும் விரைவில் திரைக்கு வரும். ஆனால் பொங்கல் பண்டிகையின்போது இருக்கும் வசூல், மற்ற நாட்களில் கிடைக்காது. பண்டிகையின்போது கொண்டாட்டத்திற்காக மக்கள் பணத்தை செலவழிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. அதனால்தான் பொங்கல், ஆண்டின் தொடக்கத்தில் வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமானது கருதப்படுகிறது. எங்களைப்போன்ற தொழில் துறையினருக்கும் சிறப்பான நாளாக கருதுகிறோம்” எனக் கூறியுள்ளார்.

ஸ்ரீராம் கூறுவதைப் போல சிற்றுண்டிப் பகுதி என்பது திரையரங்குகளில் ஒரு முக்கியமான அங்கம் என்று, நெல்லை ராம் முத்துராம் திரையரங்கின் உரிமையாளர் ராமசாமி ராஜா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "எங்கள் திரையரங்கில் 750 இருக்கைகள் உள்ளன. ஹவுஸ்ஃபுல் காட்சிகளின்போது, டிக்கெட்களின் மூலம் மட்டுமே ரூ. 1.5 லட்சம் வசூலாகும். சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்களின் மூலம் ரூ. 75,000 ரூபாயும், பார்க்கிங் டோக்கன்களின் மூலம் ரூ. 25000 வசூலாகும்" என்று தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர், சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இருக்கும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில், டிக்கெட்டுகளை விட சிற்றுண்டி, குளிர்பானங்கள் மற்றும் பார்க்கிங் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகம் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். இதனால், இந்தப் பொங்கலுக்கு 600 கோடி ரூபாய் நஷ்டம் தான் என்று நொந்து கொள்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள். 

மேட்டுப்பாளையம் ஸ்ரீ சக்தி திரையரங்கின் உரிமையாளர் செந்தில் கூறுகையில், “கொரோனா தொற்றுநோய் மற்றும் மோசமான படங்களின் தேர்வு காரணமாக, மோசமான வருவாய் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். 2020 தீபாவளி கூட மந்தமாக இருந்தது. மற்ற படங்களின் வெளியீடுகளுடன் ஒப்பிடும்போது, ‘நாய் சேகர்’ நல்ல வசூலை ஈட்டியது. ஆனால் வழக்கமான பொங்கல் வசூலுடன் ஒப்பிடும்போது அது மிகவும் கம்மிதான்" என்று செந்தில் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்றங்களின் விருப்பமான இடமான சென்னையின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றான ரோகினி திரையரங்கின் நிகிலேஷ் சூர்யா, “ரிஸ்க் எடுத்து தங்கள் படங்களை பொங்கலுக்கு வெளியிட்ட தயாரிப்பாளர்களுக்கு நன்றி” என்றார். மேலும், “புதிய வெளியீடுகள் இல்லாமல், அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும், தங்கள் திரையரங்கை மூடிவிடுவார்கள். ஒரு ஷோவாக இருந்தாலும் திரையரங்கை தொடர வேண்டும்’’ என்று நிகிலேஷ் கூறியுள்ளார்.

வட இந்தியாவில், புதிய வெளியீடுகள் இல்லாததால் பெரும்பாலான திரையரங்குகள் மூடப்பட்டன. ஆனால் தென்னிந்தியாவில் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் வார இறுதியில் வெளியான சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களை நம்பி திரையரங்குகள் பிழைத்து வருகிறது. இதில், ‘தேள்’, ‘கொம்பு வச்ச சிங்கமடா’, ‘கார்பன்’, ‘நாய் சேகர்’, ‘என்ன சொல்ல போகிறாய்’ என பல படங்கள் திரைக்கு வந்தன. ‘வலிமை’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ பொங்கலுக்கு வெளியாகும் என்று பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நினைத்தனர். அதனால் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை விளம்பரப்படுத்த தயாராகவில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நிகிலேஷ் கூறுகையில், ‘வலிமை’ மற்றும் ‘ஆர்ஆர்ஆர்’ தயாரிப்பாளர்கள் பின்வாங்குவதை நான் குறை சொல்ல மாட்டேன். கொரோனா தொற்றின்போது பொங்கல் நேரத்தில் வெளியிட்டால் வசூல் மோசமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

சில தயாரிப்பாளர்கள் நெருக்கடியைச் சமாளிக்க, நன்றாக போகக் கூடிய ஹீரோவின் ஒரு படத்தையாவது வெளியிட்டிருக்க வேண்டும் என்று நினைப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். “விஷால் அல்லது ஆர்யா போன்ற நடுத்தர வசூல் ஹீரோக்கள் படங்களை வெளியிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சிறுவர்களுக்கு ஏற்ற படம் என்பதால் ‘நாய் சேகரின்’ வசூல் நன்றாக உள்ளது. எனினும் கோடை விடுமுறை அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் வெளியிட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். தற்போதைய சூழலில் குழந்தைகள் திரையரங்குகளுக்குச் செல்வதற்கு ஏற்றதாக இல்லை. இதனால், இளைஞர்களைக் குறிவைத்து படம் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று திரையரங்கு உரிமையாளர் ராமசாமி ராஜா கூறியுள்ளார்.

மேட்டுப்பாளையம் திரையரங்கு உரிமையாளர் செந்தில் கூறுகையில், ‘ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு விதித்திருப்பதும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மற்றொரு பெரிய குறைபாடாக உள்ளது. உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு இல்லாமல் இருந்திருந்தால், ‘நாய் சேகர்’ படத்தின் வசூல் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதிலிருந்து தமிழ் சினிமா, தெலுங்கு சினிமாவில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நேரமிது என்றும் திரைத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளார். பெரிய படங்களை தெலுங்கு சினிமா ரிஸ்க் எடுத்து ரிலீஸ் செய்துள்ளது. இதனால் பார்வையாளர்களின் வரவேற்பையும் பெற்றது.

அதன்படி, நாகார்ஜுனா மற்றும் நாகசைதன்யா நடிப்பில் வெளியான ‘பங்கர்ராஜு’, மூன்றே நாட்களில் ரூ. 53 கோடியை வசூல்செய்து குவித்துள்ளது. இந்த சோதனைக் காலத்தில், இது அங்குள்ள திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. எனினும், திரையரங்கம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ‘மாஸ்டர்’, ‘மாநாடு’, ‘கர்ணன்’, ‘அரண்மனை 3’, ‘புஷ்பா’ மற்றும் ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ போன்ற படங்களின் வெற்றி திரையரங்கு உரிமையாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

ரோகிணி திரையரங்கின் நிகிலேஷ் கூறுகையில், ‘தற்போது மிகப் பெரிய பட்ஜெட் படங்கள் கூட ஓ.டி.டி. தளத்தை நோக்கி செல்ல துவங்கி விட்டது. எனினும், சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘மாநாடு’ சிலம்பரசனின் தொழில் வாழ்க்கையில் மிகச் சிறந்த படமாக அமைந்து புதிய கேரியரை துவக்கியுள்ளது. ‘டாக்டர்’ திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு இதுவரை இல்லாத அளவில் வசூலை பெற்று தந்துள்ளது. ஆனாலும் மக்கள் படங்களை ஓ.டி.டி. தளத்தில் மட்டுமே பார்க்க விரும்புகிறார்கள்" என்று கூறியுள்ளார். குறிப்பாக மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களில் ‘புஷ்பா’, ‘குரூப்’, ‘எட்டர்ணல்ஸ்’, ‘83’ மற்றும் ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ ஆகியவை தமிழ்நாட்டில் பெரிய வசூலைப் பெற்றுள்ளன. உதாரணமாக அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ மற்றும் துல்கரின் ‘குரூப்’ சிறிய நகரங்களில் சிறப்பாக வசூல் செய்துள்ளது.  நல்ல படங்கள் தெரியாத சிறு கிராமங்களிலும் கூட வெற்றி பெறும் என்பதற்கு இந்தப் படங்கள் உதாரணம் என்பதையும் குறிக்கிறது. 

தகவல்: the federal 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com