சினிமாவைவிட அரசியல் முக்கியம்: விஜய்சேதுபதி

சினிமாவைவிட அரசியல் முக்கியம்: விஜய்சேதுபதி
சினிமாவைவிட அரசியல் முக்கியம்: விஜய்சேதுபதி
Published on

அடுத்த தலைமுறையினருக்கு சினிமாவைவிட அரசியல் கற்றுத்தருவது முக்கியம் என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் அனிதாவிற்கு திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இயக்குனர் மிஷ்கின், பாலாஜி சக்திவேல், பா. ரஞ்சித், வெற்றிமாறன், நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய நடிகர் விஜய்சேதுபதி, ‘கல்வி என்பது அடிப்படை தேவை. அதற்காக நாம் ஓர் உயிரை இழந்துவிட்டு வருத்தப்பட்டு கொண்டிருக்கிறோம். தற்போது அந்த இழப்பை சர்ச்சையாக்கிக் கொண்டு இருக்கின்றனர். நம் மீது தொடர்ந்து சாதி என்ற அரசியல் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சாதியை வைத்து தான் நம்மை பிரிக்க ஆரம்பிக்கிறார்கள்.  அதை முதலில் ஒழிக்க வேண்டும். போராடுகிறவர்களை சமாளிக்க நிறைய பேர் வளர்ந்துவிட்டார்கள். ஆகையால் போராடும் முறையிலும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும். ஒரே இடத்தில் கூடி பேசினால் அதை எளிதாக கலைத்து விடுகிறார்கள். அதனால் இனிவரும் தலைவர்கள் இந்தப் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல யோசிக்க வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு சினிமாவை விட அரசியல் கற்றுத்தருவதுதான் முக்கியம்’ எனத் தெரிவித்தார்.

இயக்குநர் சமுத்திரகனி பேசியபோது, ‘ஒவ்வொரு முறை 10, 12 வது தேர்வு முடிவுகள் வரும்போதும் எத்தனை சகோதர சகோதரிகள் தற்கொலை செய்து கொள்ள போகிறார்களோ என்று ஒருவித பதற்றம் வந்துவிடுகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன் 1160 மார்க் வாங்கிய  தைரிய லட்சுமி என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அடுத்து மணிகண்டன், ரோகித் தற்போது அனிதா. கூடி கூடி பேசிக் கொண்டிருக்கிறோம். ஒன்றுமே நடக்கவில்லை. பேசியது போதும் செயலில் இறங்குவோம். முதலில் எல்லோருக்கும் சமமான கல்வி வேண்டும். கேட்போம், தரவில்லை என்றால் புறக்கணிப்போம், மீண்டும் தரவில்லை என்றால் அதனை நம் கையில் எடுத்துக் கொள்வோம்’ எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com