முதல் சம்மனிற்கு ஆஜராகவில்லை என்பதால் "காட்மேன்" வெப் சீரிஸ் இயக்குனர், தயாரிப்பாளருக்கு 2-வது சம்மனை கொடுத்துள்ளது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.
குறிப்பிட்ட சமூகத்தை பற்றி அவதூறாக வசனங்கள் இடம்பெற்றிருந்ததாக பாஜக உள்பட 5 அமைப்புகள் சார்பில் "காட்மேன்" வெப்சீரிஸ்க்கு தடை விதிக்கக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து "காட்மேன்" வெப் சீரிஸ் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் கொடுத்தனர். 3-ம்தேதி காலை 10 மணிக்கு விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் போலீசார் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் சம்மன்படி 3-ம்தேதி இருவரும் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இந்நிலையில் 2-வது சம்மனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோருக்கு கொடுத்துள்ளனர். வருகிற 6-ம்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் போலீசார் தெரிவித்துள்ளனர். 6-ம்தேதி விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.