சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணைக் குறித்து காவல் துணை ஆணையர் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், அவர் தூக்கிட்டே தற்கொலை செய்துகொண்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. ஆனாலும் மும்பை மாநகர பாந்த்ரா போலீஸார் சுஷாந்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணைக் குறித்து காவல் துணை ஆணையர் சில தகவல்களை தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள துணை காவல் ஆணையர் அபிஷேக், ''சுஷாந்த் உயிரிழப்பு தொடர்பாக இதுவரை 27-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை செய்து தகவல்களை சேகரித்துள்ளோம்.
அதேபோல் பிரேத பரிசோதனையின் முழு விவரத்தையும் பெற்றுள்ளோம். உயிரிழப்புக்கு காரணம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தான் என மருத்துவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். எனவே தற்கொலைக்கான காரணம் என்னவென்பது குறித்து தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம். பல கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது'' எனத் தெரிவித்துள்ளார்
பாட்னாவில் சுஷாந்த் வளர்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். சுஷாந்தின் ஆயிரக்கணக்கான புத்தகங்கள், நுண்ணோக்கி போன்ற சுஷாந்த் பயன்படுத்திய பொருட்கள் அவரின் நினைவாக அங்கு வைக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.