சில தினங்களுக்கு முன்னர் த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் ஆபாசமாக கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையாகி இருந்தது. இவ்விவகாரத்தில் விளக்கம் கேட்டு சென்னை ஆயிரம் விளக்கு போலீசார், நடிகை த்ரிஷாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இவ்வழக்கில் ஏற்கெனவே நடிகர் மன்சூர் அலிகானிடம் ஆயிரம் விளக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தியிருந்தனர். இந்நிலையில் தற்போது நடிகை திரிஷாவுக்கும் விளக்கம் கேட்டு கடிதமானது அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கான விளக்கத்தினை நடிகை த்ரிஷா காவல்துறையினர் அனுப்பியுள்ள கடிதத்தின் வாயிலாகவே அளிக்கவுள்ளார். அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக லியோ படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான், தன்னுடன் நடித்த நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமான முறையில் சில கருத்துகளை செய்தியாளர் சந்திப்பொன்றில் பேசியிருந்தார். அந்த காணொளியானது சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியநிலையில், த்ரிஷா அதற்கு கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உட்பட பல திரைப்பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு எதிராக தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர்.
தனக்கு எதிரான எதிர்ப்பு அதிகரிக்கவே, தான் கூறிய வார்த்தைகளுக்கு நடிகை திரிஷாவிடம், மன்னிப்ப் கேட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார் மன்சூர் அலிகான். அதில், “ஆம்!! அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு. சக நடிகை திரிஷாவே, எனை மன்னித்துவிடு” என்று கூறியிருந்தார் அவர்.
இவரின் மன்னிப்பை ஏற்ற த்ரிஷா, “தவறு செய்வது மனித குணம். மன்னிப்பது தெய்வ குணம்” என்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியிருந்தார்.
மன்னிப்புக்கோரிய சில தினங்களுக்கு பின்னர், “நான் மன்னிப்பு கேட்கவில்லை. மரணித்துவிடு என சொன்னேன். அதை பி.ஆர்.ஓ தவறாக எழுதிவிட்டார்” என்று புதிய தலைமுறை வழியாக மன்னிப்பை மறுத்துவிட்டார். இந்த தொடர் சர்ச்சைகள் குறித்து, மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கும் முன்னரே ஆயிரம் விளக்கு போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். அதில் அவர் நேரிலும் ஆஜரானார். இப்போது அதில்தான் த்ரிஷாவுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.