எழுத்தாளர் பாலகுமாரன் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல எழுத்தாளரும் சினிமா வசனக்கர்த்தாவுமான பாலகுமாரன் (71) சென்னையில் இன்று காலமானார். இவரது இறப்பு தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, “பாலகுமாரன் மறைவை நான் கனத்த இதயத்தோடு பார்க்கிறேன். அவர் மறைந்து விட்டார் என்று சொல்கிறார்கள். மறைந்தாலும் இருப்பவர் தான் எழுத்தாளர் என்ற பாணியில் அதைப் புரிந்துகொள்கிறேன். என்னுடன் நட்புடன் இருந்தவர் எழுத்தாளர் பாலகுமாரன். தன் கடைசி மூச்சு வரை தனது பேனாவை நிறுத்தாத ஒரு எழுத்தாளர் பாலகுமாரன் என்று கூறலாம். பெண்கள் குறித்த புரிதல்கள் பாலகுமாரனின் எழுத்துக்களில் உள்ளன.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ சில எழுத்துளார்கள் சிறந்து விளங்கிய போதிலும் திரைத்துறையில் சாதிக்கவில்லை. ஆனால் மூன்றே படங்களில் பாலகுமாரன் திரைத்துறையில் சாதித்துள்ளார். ஒன்று ‘நாயகன்’, மற்றொன்று ‘பாட்ஷா’ மற்றும் ‘சிந்து பைரவி’. அவரது ரசிகர் வட்டம் மிகப் பெரியது. பாலகுமாரன் எழுத்து நீண்ட நாட்கள் வாசிக்கப்படும். என் சமகாலத்தில் நான் நேசித்த ஒரு எழுத்தாளர் மறைந்தும், மறையாமல் இருக்கிறார். அவருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்தார்.