ஏர் முனையைவிட, எழுதும் பேனா முனை வலிமையானது என்பார்கள். அதற்குக் காரணம், அப்பேனா பிடித்து எழுதும் வரிகள்தான். தன்னுடைய வாழ்க்கையில் இப்படிப்பட்ட வரிகள், சிலருக்கு பாலமாக அமைவது உண்டு. அதுபோன்ற வைர வரிகளை எழுதுவோர்களில் பெண்கள் தனித்துவமானோர். ஒருகாலத்தில் தமிழ்த் திரையுலகம் ஒன்று அல்லது இரண்டு பெண் பாடலாசியர்களை மட்டுமே கண்டிருந்தது. இன்றும், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண் கவிஞர்கள் (தாமரை, குட்டி ரேவதி, ரோஹிணி, தேன்மொழி, பார்வதி, தமிழச்சி தங்கபாண்டியன், அமுதினி, சுமதிஸ்ரீ, தமயந்தி, உமாதேவி) இருந்தாலும், தன் விலாசம் தெரியுமளவுக்கு உலகில் உயர்ந்து நிற்கிறார்கள் சிலர். அந்தவகையில், மலர்களில் தாமரை தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருப்பதை போல, தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருப்பவர் கவிஞர் தாமரை. அவருக்கு இன்று தாலாட்டு நாள்.
கொங்கு நாட்டில் பிறந்து, அரசுப் பள்ளியில் பயின்று, பொருளியல் கல்லூரிக்குள் நுழைந்த தாமரை, போட்டி நிறைந்த திரையுலகில் புதுமை நிறைந்த வரிகளைப் படைத்து ரசிக இதயங்களில் பெயர் பொறிக்கலானார். ’தூய தமிழில்தான் பாடல்கள் எழுதுவேன், இரட்டை அர்த்தம் தரும் வரிகளை எழுதமாட்டேன்’ என்ற நிபந்தனையுடன் பாடல் எழுத ஆரம்பித்தவர், அதை இன்றும் தொடர்ந்து வருகிறார். அதனால் அவர் பல பாடல்கள் எழுதாமல் போயிருக்கலாம்; ஆனாலும் அவர் எழுதியிருக்கும் பாடல்கள் எல்லாமே வார்த்தைகளால் உயிரூட்டப்பட்டவை.
1997இல் சென்னைக்குப் பறந்தவந்த தாமரை, கோடம்பாக்கத்தின் திரைக்கூடாரக் கதவுகளையும் தட்ட ஆரம்பித்தார். அதில் இசையமைப்பாளர் ஆதித்யனிடம் வாய்ப்பு கேட்கச் சென்ற இடத்தில், அவர் ஓர் ஆங்கில பாடலுக்கு வரிகள் எழுதச் சொல்லியிருக்கிறார். அதை, தாமரை பிரமாதமாக எழுதிக்கொடுத்ததைப் பார்த்து ஆதித்யன் வியந்துபோய், ‘உங்கிட்ட ஏதோ விஷயம் இருக்கும்மான்னு’ பாராட்டியுள்ளார். அன்று, அவர் கொடுத்த உற்சாக நம்பிக்கைதான், இன்று அதே திரையுலகில் அவரை உச்சத்தில் கொண்டுபோய் வைத்துள்ளது.
இயக்குநர் சீமான் இயக்கிய ‘இனியவளே’ படத்தில் ’தென்றல் எந்தன் நடையை கேட்டது’ என்ற பாடல் மூலம் தென்றலாய்ப் பாடல் தந்தவர், பின்னாட்களில் தேனாய்த் தர ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் பாடலில்,
’பகலில் வராத பால் நிலவே
ஏன் என்னைத்தேடி வந்தாய்..
எதையோ கேட்க ஏங்கி நின்றாய்
இரவில் வராத சூரியனே..
ஏன் என்னைத்தேடி வந்தாய்
எதை இரவல் வாங்க நின்றாய்’
- என எழுதி எல்லாக் காதலர்களையும் ஏங்க வைத்திருப்பார்.
அதன்பிறகு விக்ரமன் இயக்கத்தில் வெளியான, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா’ பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்ததுடன், அதில் இடம்பெற்ற வரிகள், அப்பால் இருந்த சொந்தங்களையும் அணைத்துக்கொள்ள வழிகாட்டியது.
’ஆயிரம் கோடிகள் செல்வம்…
அது யாருக்கு இங்கே வேண்டும்…
அரைநொடி என்றால்கூட…
இந்த ஆனந்தம் ஒன்றே போதும்’ என்ற வரிகளும்,
’அலைகள் வந்து மோதாமல்…
கடலின் கரைகள் கிடையாது…
எந்த அலைகள் வந்தாலும்…
எங்கள் சொந்தம் உடையாது’
- என்ற வரிகளும் சொந்தபந்தங்களை இன்றும் உடையவிடாமல் பாதுகாத்து வருகிறது.
அதன்பிறகு, அவருக்கு தொடர்ந்து பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. 2000ஆம் ஆண்டில், ’மின்னலே’ படத்திற்காக ’வசீகரா என் நெஞ்சினிக்க’ என்று எழுதிய பாடல், அவருக்கும் திருப்பம் மட்டும் தரவில்லை. கூடவே பல கோடி இதயங்களையும் வசீகரிக்கச் செய்தது. அதில்கூட பெண்ணின் காதல் ஏக்க வரியைக் கூட அழகாய் உணர்த்தியிருப்பார்.
’நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால்தானே..
ஏங்குகிறேன் ஏங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்’
- என எழுதி ஏக்கம் தணித்திருப்பார்.
இப்படி, நயமான, தரமான வரிகளால் அனைவரின் நெஞ்சையும் தொட்டுக் கொண்டிருக்கும் தாமரை, இன்றும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் எழுதிய ‘மல்லிப்பூ’ பாடல் மூலம் இன்னும் பலரையும் தன்னுடைய வரிகளால் வென்றுகொண்டிருக்கிறார். தொலைவிலுள்ள தன் கணவனை நினைத்து மனைவி பாடுவதுபோன்ற பாடலான இதில், அவர்களின் ஏக்கத்தை வெளிக்காட்டியிருப்பார்.
‘நான் ஒத்தயில தத்தளிச்சேன்…
தினம் சொப்பனத்தில் மட்டும்தான்…
உன்ன நான் சந்தித்தேன்…’ என்றும்,
’வாசல பார்க்கிறேன் கோலத்த காணோம்…
வாளிய சிந்துறேன் தண்ணிய காணோம்…
சோலி தேடி போன காணாத தூரம்…
கோட்டிக்கரை நெஞ்சில் தாளாத பாரம்…
காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்..
ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்’
- என்றும் அப்பெண்ணின் ஏக்கத்தை அதில் தணித்திருப்பார்.
இளஞர் பட்டாளத்தினர் மத்தியில் கவிஞர் தாமரைக்கென்று தனி இடம் உண்டு. அவரது பாடல்களை முனுமுனுக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அவ்வளவு தித்திப்பான வரிகளை இதயங்களுக்கு நெருக்கமாக கொடுத்தவர்
”கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடிதிருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்” என்ற விண்ணைத் தாண்டி வருவாயா பாடல் மூலம் பலரது இரவுகளை கண்ணீரோடு கறைய வைத்தவர்.
”மறுவார்த்தை பேசாதே
மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாள் இல்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய் இல்லையே...” ஒரு பாடலில் ஒரு வரி மட்டுமல்ல ஒரு வார்த்தையை கூட தவிர்த்து பார்க்க முடியாத அளவிற்கு அவருடைய பாடல்கள் அமைந்திருக்கும்.
இது மட்டுமின்றி, அழகிய அசுரா, ஒன்றா இரண்டா, சுற்றும் விழி சுடரே, பார்த்த முதல் நாளே, கண்கள் இரண்டால், கண்ணான கண்ணே... இப்படி பல நூறு பாடல்களின் வரிகளால் வயது வித்தியாசமின்றி, ரசிக இதங்களைத் திருடியவர். எப்படி, தாமரை மலரை உரிக்கும்போது பல இதழ்கள் கீழே உதிரி விழுமோ, அப்படியே தாமரையின் வரிகளிலும் எண்ணற்ற வார்த்தைகளும் உருண்டோடி வருகின்றன. உண்மையில், அவருக்கு மட்டும் எப்படி, இதுபோன்ற வரிகள் கிடைக்கிறது என்பது ரசிகர்களின் பல மில்லியன் கேள்வியாக இருக்கிறது.
’திரைப்படப் பாடலாசிரியராக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் தோன்றியது’ என்பது குறித்து ஆரம்பத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ”பாடல்கள் கேட்டதன் எதிரொலி திரைப்படப் பாடலாசிரியரானது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், சில பாடல்களை நான் மெய்மறந்து ரசித்தபோது, 'நான் ரசிப்பதுபோல் மற்றவர்கள் என் பாடல்களை ரசிக்க வேண்டும்’ என்ற ஆசை விதை மனதிற்குள் விழுந்தது. பிற்பாடு அது வளர்ந்து மரமானது” எனத் தெரிவித்துள்ளார்.
அதுபோல் கடினம் நிறைந்த இரும்புக் கோட்டையான திரைப்படத் துறை நுழைவு குறித்த கேள்விக்கு, ”கடினம் என்பதால் விரும்பிய விஷயத்தை அடைய முயற்சி செய்யாமல் இருக்க முடியுமா? நாம் என்னவாக ஆகப் போகிறோம் என்றெல்லாம் ஒருவருக்கு ஏற்கனவே தெரிந்து விட்டால் வாழ்க்கையில் முயற்சியும் இருக்காது, முன்னேற்றமும் இருக்காது, சுவாரஸ்யமும் இருக்காது. 'முயல்தல்' என்பது வாழ்வு இயக்கத்தின் ஒரு பகுதி என்று நினைக்கிறேன்” எனப் பதிலளித்துள்ளார்.
இதையும் படிக்க: பொங்கலுக்கு தள்ளிப்போகும் கேப்டன் மில்லர்; ரஜினி, சிவகார்த்திகேயனுடன் மோதும் தனுஷ்!
அவருடைய எதிர்கால லட்சியம் குறித்து, ”எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அந்தத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும் என்பது குறைந்தபட்ச ஆசை. திரைத் துறையைப் பொறுத்தவரை, 'வந்தார், போனார்' என்றில்லாமல் பட்டுக்கோட்டை, கண்ணதாசன் வரிசையில் என் பெயரும் சேர வேண்டும்” எனச் சொன்ன அவர், தன்னுடைய வெற்றிக்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில், “திரைப்படம் பெரிய போதை. ஆனால், திரைப்படக் கவர்ச்சியில ஒருபோதும் நான் விழவில்லை. இதான் என் வெற்றிக்குக் காரணம்” என எப்போது சொன்னாரோ, அந்த வரிசையில்தான் அவர் இன்றும் நின்றுகொண்டிருக்கிறார். அதனால்தான் அவரால் இத்துறையில் நுழையவும், வெற்றி பெறவும் முடிந்தது என்பதைக் காலம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
”சூரியனின் வருகைக்காகக் காத்திருப்பது தாமரை..
சுவாசமான தமிழை நேசிக்கும் இதயங்களுக்கு தரமான வரிகளைத் தருவது கவிஞர் தாமரை” எனப் பலராலும் பேசப்படும் அவருக்கு மீண்டும் தாலாட்டு நாள் வாழ்த்துகள்!