ஒரு திரைப்படத்தின் வெற்றியை பெரும்பாலும் அந்தப் படத்தின் கதைதான் தீர்மானிக்கிறது. புதுமுகங்கள் முதல் உச்ச நட்சத்திரங்கள் வரை கதை சிறப்பாக அமைந்து விட்டால், படம் பெரும் வெற்றியையும், வசூலில் சாதனையையும் படைப்பது சாத்தியமே. ஆனால் தமிழ் சினிமாவில் கதை திருட்டு சிக்கல் அதிகரித்துள்ளது.
இந்திய சினிமாவில் பாலிவுட், டோலிவுட்டுக்கு அடுத்ததாக தமிழ் திரையுலகமான கோலிவுட் மூன்றாவது இடத்தில் உள்ளது. ரஜினிகாந்த், அஜித், விஜயின் படங்கள் இந்தியாவைத் தாண்டி, வெளிநாடுகளிலும் வரவேற்பை பெறுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியிலும் தமிழ்த் திரை பல மடங்கு வளர்ந்துள்ளது. குறிப்பாக ‘2பாயின்ட் ஓ’ போன்ற அறிவியல் ரீதியான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகின்றன.
சில திரைப்படங்கள் கதை திருட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கின்றன. விஜய் நடிப்பில் வெளியான கத்தி, சர்கார், அட்லி இயக்கிய மெர்சல், ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி உள்ளிட்ட பல படங்கள் சிக்கலைச் சந்தித்துள்ளன. இதற்கு தற்போதைய இயக்குனர்களிடம் வாசிப்பு பழக்கமும் வாழ்க்கை அனுபவமும் குறைவாக இருப்பதே காரணம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே விஜய் நடித்த இரு படங்கள் கதை திருட்டு வழக்கில் சிக்கிய நிலையில், தற்போது அவர் நடிக்கும் பிகில் படமும் கதை பிரச்னையில் சிக்கியுள்ளது. அந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் கே.பி. செல்வா என்பவர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை சிட்டி சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக தயாரிப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டது.
தயாரிப்பு நிறுவனம், மனு தள்ளுபடி என்று கூறிய நிலையில், உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடரவுள்ளதாகவும், அதன் காரணமாவே வழக்கை வாபஸ் பெற்றதாகவும் செல்வா கூறுனார்.பிகில் திரைப்படத்தின் கதை பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'காப்பான்' திரைப்படமும் கதை திருட்டு வழக்கை சந்தித்துள்ளது. ஜான் சார்லஸ் என்பவர் காப்பான் கதை தன்னுடையது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இவர் தொடர்ந்துள்ள வழக்கு மீது வரும் 4ஆம் தேதி விளக்கமளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு படத்தின் மீது கதை திருட்டு வழக்குகள் வருவதைத் தடுக்க புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதை தவிர, தயாரிப்பாளர்களும் கதை சொல்லும் இயக்குனர்களிடம் உறுதி மொழி பத்திரம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் கருத்து நிலவுகிறது. இந்த வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே கதை திருட்டு சிக்கலுக்கு தீர்வு காண முடியும் என்று கூறப்படுகிறது.