நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் குமரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்தார். அதில், "கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து வெளிவர உள்ள சபாபதி என்னும் திரைப்படத்தின் விளம்பரம் நாளிதழ் மற்றும் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் சந்தானம் ஒரு சுவற்றின் முன் சிறுநீர் கழிப்பது போலவும் அந்த சுவற்றில் ‘தண்ணீர் திறந்துவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் திரண்டு வாரீர்’ என எழுதப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து அண்டை மாநிலங்களிடமும் தண்ணீர் திறந்து விடக் கோரி அனைத்து பருவ காலங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது அதிலும் பல நேரங்களில் திரைத்துறையினர் சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் கடந்த காலங்களில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பட விளம்பரம் ஆனது தண்ணீர் விடக்கோரி நடைபெறும் போராட்டங்களை கிண்டல் அடிப்பது போல் உள்ளது.
அந்த விளம்பரத்தில் நடிகர் சந்தானம் ஒரு பொது சுவற்றில் சிறுநீர் கழிப்பது போல் வெளியிட்டிருப்பது சட்டப்படி பொது இடங்களில் அநாகரீகமான முறையிலும் நோய்த்தொற்று பரப்பும் வகையிலும் அசுத்தமான செயலில் ஈடுபடுதல் என்பது சட்டப்படி குற்றமாகும்.
மேலும் நடிகர் சந்தானம் போன்ற கதாநாயகன் இது போன்ற செயல் செய்வதாக காட்சிப்படுத்துவது என்பது மற்ற பொது மக்களுக்கு இது போன்ற செயல்களில் ஈடுபட ஊக்குவித்தல் ஆகும். நடிகர் சந்தானம் மற்றும் சபாபதி பட இயக்குனர் சீனிவாசராவ் உள்ளிட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகளின் கீழ் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்துள்ளார்.