பரபரப்புக்கும் கிசு கிசுக்களுக்கும் பஞ்சமே இல்லாத நடிகரில் ஒருவராக கோலிவுட்டில் வலம் வரக் கூடியவர் சிலம்பரசன். இருப்பினும் அந்த பேச்சுகளுக்கெல்லாம் தன்னுடைய படங்களின் மூலம் பதிலடி கொடுப்பதையும் சிம்பு தவறுவதில்லை.
தொடர்ந்து தோல்வி அல்லது சுமாரான படங்களாக நடித்து வந்த சிம்பு, மாநாடு ஹிட்டானதை அடுத்து மீண்டும் முன்னணி நட்சத்திரத்தின் உச்சத்திற்கு சென்றார். அதன் பிறகு வந்த வெந்து தணிந்தது காடு வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவரது நடிப்பிலான ’பத்து தல’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
அதன்படி மார்ச் 31ம் தேதி ரிலீசாக இருக்கும் ’பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவரே பாடியிருக்கும் நம்ம சத்தம் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எழச் செய்திருக்கிறது.
இந்த நிலையில், பத்து தல படத்தின் இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா சிம்புவின் கெட்டப் குறித்தும், படத்தின் சில சாராம்சங்கள் குறித்தும் இணையதள நேர்காணலில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
அதில், “பத்து தல படத்தின் கெட்டப்பில் வெந்து தணிந்தது காடு படத்தின் க்ளைமேக்ஸில் சிம்பு வந்தது எனக்கு சங்கடமாகவும், வருத்தமாகவே இருந்தது. கவுதம் மேனன் எனக்கு பாஸ். சிம்பு எனக்கு நல்ல நண்பர். அதனால் சரி பரவாயில்லை என நினைத்துக்கொண்டு கடந்து செல்கிறேன்.
எது எப்படியோ, வெந்து தணிந்தது காடு க்ளைமேக்ஸில் பத்து தல கெட்டப்பில் சிம்பு வந்திருந்தாலும் அதனை ரசிகர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள் என்றால் அதுவே போதும். மகிழ்ச்சிதான்.” எனக் கூறியிருக்கிறார்.
மேலும், பத்து தல படம் மணல் மாஃபியா கும்பலின் கிங்காக சிம்பு நடிக்கிறார் என்றும் தகவல்களும் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. முன்னதாக வெந்து தணிந்தது காடு க்ளைமேக்ஸில் இருந்த அதே கெட்டப்பில்தான் வாரிசு படத்தின் தீ தளபதி பாடலின் ப்ரோமோவிலும் சிம்பு தோன்றியிருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.