சாதிய கொடுமைகளை, மதவாத அரசியலை தோலுரிக்கும் ‘பாதாள் லோக்’

சாதிய கொடுமைகளை, மதவாத அரசியலை தோலுரிக்கும் ‘பாதாள் லோக்’
சாதிய கொடுமைகளை, மதவாத அரசியலை தோலுரிக்கும் ‘பாதாள் லோக்’
Published on

அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற OTT தளங்களின் பயன்பாடு சமீபத்தில் அதிகரித்துள்ளது நாம் அறிந்ததே. திரையரங்குகள் செயல்படாத நிலையில் மக்கள் தற்போது தங்கள் பொழுது போக்கிற்காக OTT தளங்களையே பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

அனைத்து வகைமையிலும் வெப்சீரீஸ்கள் உருவாக்கப்படுகின்றன என்றாலும்., த்ரில்லர் வகைமை வெப்சீரிஸ்களையே பலரும் விரும்பி பார்க்கின்றனர் என்கிறது ஒரு தகவல். தமிழ் வெப்சீரிஸ்களைக் காட்டிலும் இந்தி மற்றும் பிற மொழி வெப்சீரிஸ்கள் பலராலும் விரும்பி பார்க்கப்படுகிறன. அவ்வகையில் ஜம்தாரா,பஞ்சாயத், பாதாள் லோக் போன்ற சீரியல்கள் சமீபத்திய ஹிட் லிஸ்ட்டில் உள்ளன.

விராத் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா தயாரித்திருக்கும் பாதாள் லோக் என்ற வெப்சீரீஸ்., சமகால இந்திய அரசியலை துளியும் அச்சமின்றி விமர்சித்திருக்கிறது. இந்திய மக்களிடம் குறிப்பாக வட இந்திய மக்களிடம் ஊறிப் போயிருக்கும் சாதிய பாகுபாட்டின் உச்சகட்ட அவல நிலையினை இது எடுத்துப் பேசியிருக்கிறது. மதவாத கட்சிகளின் அறுவறுக்கத்தக்க முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டிருக்கிறது பாதாள் லோக். முதல் சீசனில் 9 எபிசோடுகளாக பிரித்து உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு எபிசோடும் 40 முதல் 45 நிமிடங்கள் வரை ஓடக் கூடியதாக இருக்கிறது. கிட்டத் தட்ட 7 மணி நேரம் ஓடும் இந்த வெப்சீரீஸில் எங்குமே திரைக்கதை தொய்வோ, சோர்வோ இல்லை.

ஏழுமணி நேரக் கதையினை சொல்லத் துவங்கும் முன் மிகத் தெளிவாக பாதாள் லோக்கில் வரும் மனிதர்கள் எப்படியானவர்கள் என முதல் எபிஸோடின் முதல் காட்சியே தெளிவாக நமக்கு விளக்குகிறது. ஸ்வார்ப் லோக், தர்த்தி லோக், பாதாள் லோக் என மூன்று அடுக்குகளைக் கொண்ட மக்களால் இயங்குகின்றன வடமாநிலங்கள் என்கிறது கதை., ஸ்வார்ப் லோக் மேல் தட்டு வர்க்க மக்கள்., தர்த்தி லோக் நடுத்தர வாழ்வியலைக் கொண்ட மக்கள்., அடுத்ததாக பாதாள் லோக் இவர்கள் தான் இந்த வெப்சீரீஸின் ஆன்மா. திரைமறைவு குற்றங்களைச் செய்கிறவர்களை மட்டுமே பாதாள் லோக் வாசிகளாக சித்தரிக்க வில்லை இந்த வெப்சீரீஸ்., ரயில் நிலையங்களில் ரயில்பெட்டி எலிகள் போல் வாழும் ஆதரவற்ற மக்கள்., அறுந்த பட்டம் போல இந்தியச் சாலைகளில் வசிக்கும் ஏழை எளியமக்கள்., கிராமங்களில் ஆதிக்க சாதியால் துன்புறுத்தப்படும் பட்டியலின மக்கள் என தீபகற்ப இந்தியாவை அனைத்து கோணங்களிலும் பதிவு செய்திருக்கிறது பாதாள் லோக்.

டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் முக்கிய தொலைக்காட்சியொன்றின் ஊடகவியலாளர் சஞ்சீவ் மெஹ்ரா. அவரைக் கொலை செய்ய மாஸ்டர் ஜி என்பவரது தலைமையில் கபீர், விஷால் தியாகி, டோப் சிங், சீனி என நான்குபேர் டெல்லி வருகின்றனர். அவர்களில் ஒருவர் திருநங்கை. கபீர் கார் திருடன், மற்றொருவன் 45 கொலைகளைச் செய்த அதிபயங்கர கொலைகாரன். இந்த நால்வரின் கொலை முயற்சி முதல் எபிசோடிலேயே தோற்றுப் போகிறது. இவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். ஆனால், இவர்கள் சஞ்சீவ் மெஹ்ராவை கொல்ல வந்த காரணத்தை பின்னோக்கி சென்று விசாரித்தால்., நீங்கள் சற்றும் கணிக்க முடியாத சுவாரஸ்யங்கள் கிடைக்கும்.

இந்த கொலை முயற்சி வழக்கை விசாரிக்க டெல்லியிலிருந்து குற்றவாளிகளின் கிராமங்களைத் தேடி பயணிக்கும் காவல்துறை அதிகாரியாக ஜெய் தீப் நடித்திருக்கிறார். ஹாதிராம் என்ற கதாபாத்திரப் பெயரில் வரும் இவர் தான் கதையின் மைய நூலை அறுபடாமல் கடைசிவரை நூற்த்தவர். இவருக்கு உதவியாக வரும் காவல்துறை அதிகாரி இஸ்வாக் சிங்., இம்ரான் அன்சாரி என்ற இந்த கதாபாத்திரம் ரொம்பவே முக்கியமானது. ஒரு இஸ்லாமியர் காவல்துறையில் எத்தனை நேர்மையான பெருந்தன்மையான மனிதராக வலம் வந்தாலும் அவர் மீது பூசப்படும் மதச் சாயமும்., மக்களின் அடிப்படைவாத பார்வையும் எப்படி இருக்கிறது என அழுத்தம் திருத்தமாக பதிவிடுகிறார்கள் இந்த வெப்சீரீஸின் இயக்குநர்கள் அவிநாஷ் அருண் மற்றும் ப்ரோஷித் ராய். இவர்களில் அவிநாஷ் அருண் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும் கூட.

கதையில் வரும் ஒரு அரசியல் தலைவருக்கு பாஜ்பாய் என பெயரிட்டு நேரடியாகவே ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைமையை விமர்சித்திருக்கிறது பாதாள் லோக். பட்டியலின மக்களின் காவலன் என சொல்லிக் கொள்ளும் பாஜ்பாய்., பட்டியலின மக்களின் வீடுகளுக்கு சென்று உணவு அருந்துகிறார். ஊடகங்களுக்கு முன் அப்படிச் செய்யும் அவர் திரைமறைவில் கங்கை நீரில் குளிக்கிறார் என காட்சி படுத்தப்பட்டிருக்கிறது. அதற்காக கங்கை நீர் அடைக்கப்பட்ட கேன்கள் அவர் செல்லும் இடமெல்லாம் கொண்டு செல்லப்படுகின்றன. சென்சார் தலையீட்டால் அவ்வப் போது திணறும் இந்திய படைப்பாளிகளுக்கு OTT என்பது வரம். இங்கு எந்த சென்சார் பிரச்னையும் இன்றி ஒரு படைப்பாளி தன்னுடைய கருத்துகளை பேச முடிகிறது. அதற்காகவே இந்த OTT தங்களை கொண்டாடலாம்.

சிங், குஜ்ஜர், சவுத்ரி என நேரடியாக இனக் குழுக்களின் பெயர்களை குறிப்பிட்டே பேசியிருக்கிறது இப்படம். பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஒருவரை பத்துபேர் கொண்ட ஆதிக்க கும்பல் பாலியல் கொடுமை செய்யும் காட்சி நம் இயாலாமையை சுட்டிக் காட்டுகிறது. நம்மை அறியாமல் தலைகுனிய வைக்கிறது அந்தக் காட்சி. நம்முடன் சமகாலத்தில் சக மனிதர்களாக வாழும் ஒரு தரப்பை இப்படி கொடுமை செய்வது எந்த வகையில் நியாயமாகும்...? எனக் கேட்க வைக்கிறது.



ஒரு படைப்பிற்கு கதை எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அதன் கதாபாத்திர வடிவமைப்பு முக்கியம். அவ்வகையில் எந்த ஒரு படைப்பிலும் சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நின்றுவிடும். அதுபோல பாதாள் லோக் வெப்சீரிஸில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் ஆழமான விவாதத்திற்கு பிறகே வடிவமைக்கப்படிருக்கிறது எனலாம். ஊடகவியலாளர் சஞ்சீவின் மனைவியாக வரும் ஸ்வாஸ்திகா முகர்ஜியின் கதாபாத்திரம் சிறப்பான ஒன்று. கணவன் தன்னிடம் நேர்மையாக இல்லை என அறிந்த தருணம் கோவத்திலோ ஆற்றாமையாலோ தடம் மாற நினைக்கும் அவர் ஒரு நொடியில் உடைந்து அழுகிறார். “இல்ல என்னால தப்பு பண்ண முடியாது” எனச் சொல்லி அழும் அவர், தனிமையின் வலியை அவர் வளர்க்கும் நாய்கள் மீது காட்டும் அன்பால் சரிசெய்ய முயல்கிறார். நாய்களின் மீதான அவரது பாசத்திற்கும் 45 கொலைகள் செய்த விஷால் தியாகியின் கதாபாத்திரத்திற்கும் இயக்குநர்கள் போட்டிருக்கும் முடிச்சு அத்தனை நுட்பமானது. விஷால் தியாகி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அபிஷேக் பானர்ஜி.

முதல் எபிசோடில் வரும் நால்வர் கூட்டணியில் சீனி எனப்படும் திருநங்கை கதாபாத்திரம் நுட்பமானது. ப்ளாஸ் பேக்கில் ரயில் நிலையமொன்று காட்டப்படுகிறது. ராமர் கோவில் கட்டுவோம் என தலையில் காவி துண்டுகளை அணிந்து கொண்டு செல்லும் ஒரு கும்பல் ரயிலில் மாமிசம் சாப்பிட்டுக் கொண்டிருந்த இஸாமியர் இருவரை அடித்து கொலை செய்கிறது. “ஐயா அது வெறும் சிக்கன் தான் நீங்க நினைகிற மாதிரி இல்ல” என கத்திக் கொண்டே அவர்கள் இறந்து போகின்றனர். அந்த கூட்டத்தில் தொலைந்து போகும் ஒரு சிறுவன் பாலியல் துன்பங்களுக்கு ஆட்பட்டு திருநங்கையாக மாறி இறுதியில் சிறைக்குச் செல்லும் நிலை உருவாகிறது. பாதாள் லோக் வெப்சீரிஸின் சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு காதாபாத்திரத்தின் பின்னனி என்ன என்பதோடு அல்லாமல் அப்படியொரு கதாபாத்திரம் உருவாக அவனது தனிப்பட்ட வாழ்வில் நடந்த முக்கிய சம்பவம் என்ன என்பதனையும் விவரித்துச் செல்கிறது. டோப் சிங் எப்படி சாதிய அடக்கு முறையால் ஆயுதத்தை கையில் எடுத்தான் என பேசுகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குரலாகவும் பாதாள் லோக் வீரமுடன் முழங்கியிருக்கிறது.

பக்த பிரகலாதன் கதையில் வரும் இரணியகசிபு வதத்தினை விஷால் தியாகியின் கதாபாத்திரத்துடன் பொறுத்தி காட்சிகளை கோர்த்தது சர்வதேச தரத்திலான கதை சொல்லல் பாணி. இப்படி எல்லாம் ஒரு படைப்பை உருவாக்கினால் சர்ச்சை எழாமல் இருக்குமா என்ன...? கூர்க்கா இன மக்களை இந்த தொடரில் இழிவு படுத்தியதாகக் கூறி டார்ஜிலிங் பாஜக எம்.பி ஒருவர் கடந்த மே மாதம் புகார் அளித்தார்.

இக்கதையில் உத்தரப்பிரதேசத்தில் அமைச்சராக உள்ள ஒருவர் சாலைகளை திறந்து வைக்கும் புகைப்படம் நாளிதழில் வெளியாகியிருக்கும். அந்த புகைப்படத்தில் இருக்கும் ஒருவர் பாஜக எம்.எல்.ஏ. நிஜத்திலும் அதேபோன்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், சாலைகளை திறந்து வைக்க எம்.எல்.ஏ நந்கிஷோர் குர்ஜார், அவரின் பின்னால் நிற்பார். 'பாதாள் லோக்’ சீரிஸிலும் நந்கிஷோரின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். இது தொடர்பாகவும் பாதாள் லோக்கின் தயாரிப்பாளர் அனுஷ்கா ஷர்மா மீது புகார் கொடுக்கப்பட்டது. குர்ஜார் இன மக்களை தவறாக சித்தரித்து விட்டதாகவும் பிரச்னைகள் எழுந்தன.

பாதாள் லோக்கின் ஒளிப்பதிவாளர் குழு அசுர உழைப்பைக் கொட்டியிருக்கிறது. டெல்லியினை எந்த நிறத்தில் காட்ட வேண்டும் கதையுடன் தொடர்புடைய பிற கிராமங்களை எந்த டோனில் காட்ட வேண்டும் என ஒவ்வொரு ஃப்ரேமிலும் மெனெக்கெடல் தெரிகிறது. இக்கதையில் வசனம் முக்கிய பங்கு வகிக்கிறது போலீஸ் விசாரணையில் ஒருவர் “ஐயா நாங்க இந்த ரயில்வே ஸ்டேஷனோட எலிங்க ஐயா” என்கிறார். நிராகரிப்பின் விரக்தியில் நாய்களை வளர்க்கும் டாலி “நான் வளர்க்கும் நாய்களுக்கு நான் தேவைப்படாம இருக்கலாம்., ஆனா எனக்கு ஆறுதலே நான் வளர்க்கும் நாய்கள் தான்.” என்கிறார். திருநங்கையொருத்தி தன் காதலனிடம் அழுது கொண்டே “நான் இப்டி பணம்,பணம்னு சேக்குறது எல்லாம் உனக்காக தான் டா., ஒரு ஆப்பரேஷன பண்ணிகிட்டு உன் கூட வாழ நினைக்கிறேன்” என்கிறார். இப்படி நுணுக்கமான மனித உணர்வுகளை வசனமாக எழுதி நம்முள் ஆழமாக கடத்தியிருக்கிறது சுதீப் ஷர்மாவின் குழு.

இப்படி எட்டு திசையிலும் மனித உணர்வுகளை, சமகால இந்திய அரசியலை, மதவாதத்தை, சாதிய சீர்கேட்டை உடுக்கை அடித்து பேசியிருக்கும் இந்த வெப்சீரிஸ் சினிமாவாக உருவாகி இருந்தால் திரையரங்கை அடைந்திருக்கும் வாய்ப்பு குறைவு தான். ஆனால் OTT'ல் இது சாத்தியமாகியிருக்கிறது. படைப்பு சுதந்திரத்தை எது முழுமையாக உறுதி செய்கிறதோ அதுவே கலைக்கான அசல் தளம். வரும்
காலங்கள் இப்படியான அசல் தளங்களை நோக்கி முன்நகரட்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com