சமூக வலைதளங்களில் தனது கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்து வரும் நடிகர் சித்தார்த், ''கடந்த 15 ஆண்டுகளாக பயமின்றி வாழ முயற்சித்து வருகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மணிரத்னம், ஜெயேந்திரா பஞ்சாபகேசன் தயாரிப்பில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் 'ஆந்தாலஜி' வகை வெப் சீரிஸ் 'நவரசா'. டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு, அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், சூர்யா, சித்தார்த், பிரசன்னா, விஜய் சேதுபதி, அதர்வா, யோகிபாபு, அழகம் பெருமாள், ரேவதி, பார்வதி, ரோகினி, ரம்யா நம்பீசன், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில் 'இன்மை' என்கிற பெயரில் 'பயம்' உணர்வை மையப்படுத்தி இயக்கி இருக்கிறார் ரதீந்திரன் ஆர்.பிரசாத். இதில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சித்தார்த் 'இந்தியா டுடே'-வுக்கு விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக அரசுகளுக்கு எதிராக பயமின்றி குரல் கொடுத்து வரும் சித்தார்த், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த சித்தார்த், ''கடந்த 15 ஆண்டுகளாக பயமின்றி வாழ முயற்சித்து வருகிறேன். இந்த எண்ணம், பாதுகாப்புமிக்க நபராக வாழ வேண்டும் என்பதில் இருந்து வருகிறது. ஒரு நடிகனாக, உங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்வது பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், அதை செய்வதற்கு தேவையான வசதிகள் இருக்கின்றன. அதுவே நிஜ வாழ்க்கையில், உங்கள் எண்ணத்தை பிரதிபலிக்க வேண்டும் என்றால், அதற்கான பின்விளைவுகளை எதிர்கொள்ளவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓடிடியில் அதிகரித்து வரும் ஆந்தாலஜி படைப்புகள் குறித்தும் பேசிய அவர், ''தனிப்பட்ட முறையில், நான் ஆந்தாலஜி போன்ற தொடர்களை ரசிப்பது கிடையாது. மற்றவர்கள் போல, 'நவரசா' போன்ற ஒன்பது பகுதிகளைக் கொண்ட தொடரை ஒரே நேரத்தில் பார்க்கும் பழக்கமும் இல்லை. என்னை பொறுத்தவரை ஒரு நாளைக்கு ஒரு திரைப்படத்தை பார்க்க விரும்புகிறேன். சினிமா என்ற மீடியத்தை ஒரு குறுகிய வடிவிலேயே பார்க்கிறேன்" என்று கூறினார்.
கடந்த 17 மாதங்கள் எப்படி இருந்தன என்பதை விவரிக்க எந்த உணர்வை வெளிப்படுத்த விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு சித்தார்த், ''கடந்த 20 - 25 வருடங்களாக நான் வெளிப்படுத்த விரும்பும் உணர்வு கோபம். சமீபத்திய பெருந்தொற்றுக் கவலை, பதற்றம் மற்றும் நம்பமுடியாத அளவு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் உதவ வேண்டியவர்கள் உதவாதபோது, அவர்களால் எதுவும் நடக்காதபோது அந்தச் செயல் உங்களை மிகவும் கோபப்படுத்தும்" என்றார்.
மேலும், ''இந்தியில் தற்போது நடிக்காமல் இருப்பதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. இப்போதைக்கு தமிழில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதேநேரம், எனது ஆர்வத்தை தூண்டும் கதைகள் இந்தியில் இருந்து வரும் பட்சத்தில் அதிலும் நடிப்பேன்" என இந்தி தொடர்பாகவும் பேசியிருக்கிறார் நடிகர் சித்தார்த்.