சென்னை தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நடிகர் பார்த்திபன் ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பொதுக்குழுவை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும் சங்க பணம் ரூ.7கோடி கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி ஏ.எல்.அழகப்பன் தலைமையிலான தயாரிப்பாளர்கள் ஒருசிலர் சில நாட்களுக்கு முன்பு போர்க்கொடி தூக்கி வந்தனர். மேலும் சங்கத்தில் பதவியில் உள்ள கவுதம் மேனன் மற்றும் பிரகாஷ்ராஜ் சங்கத்திற்கு வருவதே இல்லை என குற்றம் சாட்டினர்.
இதையடுத்து சென்னையில் தயாரிப்பாளர் சங்க அவசர செயற்குழுக் கூட்டம் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் கவுதம் மேனனுக்கு பதிலாக நடிகர் பார்த்திபன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இளையராஜா 75 என்ற இசைநிகழ்ச்சி சென்னையில் தயாரிப்பாளர் சங்கம் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நடிகர் பார்த்திபன் கடிதம் எழுதியுள்ளார்.
இதனிடையே இன்று காலை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நாமும் ஸ்பெஷல் என்பது மறந்து நம் சுயம் பாதிக்கப்படும் போது சங்கம் சமூகம் என்பதெல்லாம் மூன்றாம் பட்சமே!” என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.