பத்மாவதி திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்த தனது நிலைப்பாட்டை நாடாளுமன்றக் குழு முன்பு இன்று இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தெரிவிக்கவுள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலிக்கு நாடாளுமன்றக் குழு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது. பத்மாவதி படம் தொடர்பாக நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை 3:00 மணியளவில் நடைபெறும் கூட்டத்தில் இயக்குநர் பன்சாலி உடன் மத்திய திரைப்பட தணிக்கைக்குழு தலைவர் பிரசூன் ஜோஷியும் கலந்து கொள்வார் என்று நாடாளுமன்ற குழுத் தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்த நாடாளுமன்றக் குழுவில் பாலிவுட் நடிகராக இருந்து பாஜக எம்.பி. ஆக தேர்வு செய்யப்பட்ட பரேஷ் ராவல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராஜ் பாப்பர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தீபிகா படுகோனே நடித்து வெளியாகவுள்ள பத்மாவதி திரைப்படத்தில் ராஜபுத்திர வம்சத்தினரை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, இந்தத் திரைப்படத்திற்கு வெளியிட கர்னசேனா உள்ளிட்ட சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்களும் இந்த திரைப்படத்தை வெளியிட ஆட்சேபனை தெரிவித்து வந்தனர். டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம், கடும் எதிர்ப்பால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.