பலவித போராட்டங்களுக்குப் பிறகு பத்மாவதி படம் வரும் 25-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஆனால், கர்னிசேனா அமைப்பு படத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று மிரட்டிவருகிறது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ‘பத்மாவதி’. ரன்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோன் நடித்துள்ள நடித்த இந்த வரலாற்று படத்தில், ராணி பத்மாவதி மற்றும் ராஜபுத்திர மன்னர்களை தவறாக சித்தரிப்பதாகக் கூறி கர்னிசேனா உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இதனால் திரைப்படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டது. தணிக்கை வாரியத்தின் அறிவுறுத்தல்களின் பேரில், திரைப்படத்தின் பெயர் (பத்மாவத்) உட்பட சில மாற்றங்கள் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. இதையடுத்து மத்திய தணிக்கைத் துறை படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இதனால், பலவித போராட்டங்களுக்குப் பிறகு வரும் 25-ம் தேதி பத்மாவதி’ வெளியாக இருக்கிறது. அதே தேதியில் அக்ஷய்குமார் நடிக்கும் ’பத்மன்’ படமும் வெளியாகிறது.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கர்னிசேனா அமைப்பு, எந்த சமரசமும் இன்றி திரைப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்றும் இல்லை எனில், அதன் விளைவுகளை தணிக்கைத்துறையும் மத்திய அரசும் சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளது.