பல்வேறு சர்ச்சைகள், தடைகளை தகர்த்தெறிந்து ‘பத்மாவத்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான ஹிந்திப் படம் ‘பத்மாவதி’. தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி, பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மாவதியின் வரலாற்றை சித்தரிக்கும் விதமாக பத்மாவதி திரைப்படம் உருவாகியிருப்பதாக கூறி படத்திற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியாவதாக இருந்த படம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து படத்தின் பெயர் `பத்மாவத்' என மாற்றம் செய்யப்பட்டும், காட்சிகளில் மாற்றம் செய்தும் சென்சார் போர்டு படத்தை திரையிட அனுமதி வழங்கியது. இந்நிலையில் 0சர்ச்சைக்குள்ளான ‘பத்மாவத்’ திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 150 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட உள்ளது.
இதனிடையே, திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. ராஜஸ்தானில் பத்மாவத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனங்களை அடித்து நொறுக்கி, ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்னி சேனா அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் ஜெய்பூரில் அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
சித்தோகரில் குவிந்த பெண்கள் அங்குள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த சித்தோர் கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்து தங்களது எதிர்ப்பை காட்ட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பதற்றத்தை தணிக்கவும், சட்டம் ஒழுங்கை காக்கவும் மாநிலம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல் பத்மாவத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் மேம்நகரில் உள்ள தனியார் வணிக வளாகம் மற்றும் அதற்கு அடுத்துள்ள கட்டடங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பத்மாவத் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் வணிக வளாகப் பகுதி காவல்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பத்மாவத் எங்கள் வளாகத்தில் திரையிடப்படவில்லை என நாங்கள் அறிவிப்புப் பலகை வைத்திருந்தும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டது வேதனை அளிப்பதாக வணிக வளாக பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் எந்த பெருவணிக வளாகங்களிலும் பத்மாவத் திரைப்படம் வெளியிடப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, என்ன நடந்தாலும், நாங்கள் கைது செய்யப்பட்டாலும் கூட 'பத்மாவத்' திரைப்படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம், அதை தடுப்போம் என்று ராஜ்புத் கர்னி சேனா தலைவர் லோகேந்திரா சிங் கல்வி ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். இந்நிலையில் தடைகளை தகர்த்தெறிந்து உலகம் முழுவதும் நாளை ‘பத்மாவத்’ திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது.