கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வெளியான பத்மாவத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தாங்கள் கடவுளாக வணங்கும் ராணி பத்மாவதியை அவமதிக்கும் வகையில் பத்மாவத் திரைப்படம் இருப்பதாக கூறி ராஜபுத்திரர்கள் அமைப்புகள் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்ணி சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டனர்.
கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நேற்று உலகம் முழுவதும் பத்மாவத் திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஆனால், வன்முறை சம்பவங்கள் காரணமாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களில் படம் வெளியிடப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் சில மாநிலங்களிலும் பதற்றம் நிறைந்த இடங்களில் படம் வெளியாகவில்லை. பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தான் படம் வெளியிடப்பட்டது.
எதிர்ப்புகள் காரணமாக திரையரங்குகள் பல இடங்களில் பாதி அளவே நிரம்பின. இருப்பினும், தீபிகா படுகோனே, ரன்வீர் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சிக்கு திரண்டுவிட்டார்கள். தாங்கள் படத்திற்கு சென்ற டிக்கெட்டுகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்நிலையில், பத்மாவத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ரன்வீர், தீபிகா நடிப்புகளை வெகுவாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரன்வீர் நடிப்பில் மிரட்டி உள்ளார் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
இதுஒருபுறம் இருக்க, பத்மாவத் படத்தில் ராணி பத்மாவதியை புகழ்ந்தே பேசப்பட்டுள்ளது. இதனால், படம் பார்த்தவர்கள் ஏன் இந்த போராட்டங்கள் நடைபெற்றன என்ற கேள்வி எழுப்பினர். மேலும் போராட்டம் நடத்தியவர்கள் முதலில் பத்மாவத் படத்தை பார்க்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், பத்மாவத் படம் மீது சில விமர்சனங்களும் எழுந்துள்ளது. ரன்வீர் சிங் நடித்த அலாவுதீன் கில்ஜியை மிகவும் காட்டுமிராண்டியாக் காட்டியுள்ளது தவறான சித்தரிப்பு என்று கருத்துக்கள் கூறப்பட்டுள்ளது. படம் எடுத்த விதத்தில் இருந்த கவனம் கதையில் இல்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது ஒரு விஷுவல் ட்ரீட் படமாக இருக்கும் என்கின்றனர்.
இதனிடையே, பத்மாவத் படம் முதல் நாளில் 18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவில் ரூ.1.88 கோடி, இங்கிலாந்தில் ரூ.88.08 லட்சம், நியூசிலாந்தில் 29.99 லட்சம் வசூல் ஆகியுள்ளது.