'நட்சத்திரம் நகர்கிறது’ தமிழ் சினிமாவில் புதிய திறப்பு.. நிச்சயம் ஓர் உரையாடல் தொடங்கும்!

'நட்சத்திரம் நகர்கிறது’ தமிழ் சினிமாவில் புதிய திறப்பு.. நிச்சயம் ஓர் உரையாடல் தொடங்கும்!
'நட்சத்திரம் நகர்கிறது’ தமிழ் சினிமாவில் புதிய திறப்பு.. நிச்சயம் ஓர் உரையாடல் தொடங்கும்!
Published on

காதலும், காதல் சார்ந்த புனித பிம்பங்களையும், அதன் மூலம் நிகழும் சாதிய அரசியலையும் விசாரணைக்கு உட்படுத்துகிறது பா. இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

இனியன் (காளிதாஸ்), ரெனே (துஷாரா), அர்ஜூன் (கலையரசன்), யஸ்வந்திரன் (ஹரி கிருஷ்ணன்) எனப் பலரை உள்ளடக்கிய நாடகக் குழு ஒன்று. இந்தக் குழுவுக்குள் பலதரப்பட்ட காதல்கள் இருக்கிறது. அதேபோல் பலதரப்பட்ட சிக்கல்களும் இருக்கிறது. இனியன் - ரெனே இடையே உள்ள காதலில் ஒரு சிக்கல், அர்ஜூனுக்கு காதலையும், சாதியையும் பற்றிய புரிதலே சிக்கல். மேலும் இந்த சமூகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல், ஒரு ஆணுக்கும் திருநங்கைக்குமான காதல், முதிய வயதுடையவருக்கு வரும் காதல் எனப் பல பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு நாடகத்திற்காகத் தயாராகிறார்கள். அது காதலையும், காதலை சுற்றி சாதிய அமைப்புகள் ஏற்படுத்திருக்கும் ஆபத்துகளையும் பற்றி நாடகம் என்று முடிவாகிறது. இந்த நாடகத்தை உருவாக்கி வெற்றிகரமாக அரங்கேற்றினார்களா? இந்தக் குழுவுக்குள் இருக்கும் ஒவ்வொருவருக்கு இடையிலும் உள்ள முரண்கள் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.

இந்தப் படத்தை மிகத் தரமானதாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா. இரஞ்சித். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மை எழுதப்பட்டிருப்பதும், அதற்குள் வரும் மாற்றமும் இயல்பாக கொண்டு வந்திருக்கிறார். பேசத் தயங்குகிற, இப்போதைக்கு அவசியமான ஒன்றைக் கதைக்களமாக எடுத்தது ஒரு வெற்றி என்றால், அதை கலை நேர்த்தியுடனும் சுவாரஸ்யமாகவும் கொடுத்திருப்பது படத்தின் பிரதான வெற்றி.

காளிதாஸ், துஷாரா, கலையரசன், ஹரி கிருஷ்ணன், வினோத், சுபத்ரா, ஷபீர், ஸ்டீஃபன் ராஜ் என படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் தங்களின் முழுமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நாடகத்துக்கான ஒத்திகை காட்சிகள், துஷாரா - காளிதாஸ் இடையேயான உரையாடல், கலையரசன் பேசும் தவறான புரிதல்களை எதிர்க்கும் காட்சிகள் என படத்தில் பல இடங்களில் அனைவரும் நடிப்பில் மிரட்டுகிறார்கள்.

காதலுக்கு மதம் கிடையாது, சாதி கிடையாது என பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில், பாலினம், வயது போன்ற பேதமும் கிடையாது. லவ் இஸ் லவ் என்ற நிகழ்கால யதார்த்தத்தைச் சுட்டுகிறார் இயக்குநர் இரஞ்சித். அதன் மூலம் காதல் மிகவும் இயற்கையான ஒரு நிகழ்வு, அதை பாகுபாடு பார்த்து பிரிப்பதற்கு பின்னால் நிகழும் சாதிய, சமூக கட்டமைப்பை நோக்கிய கேள்வியையும் எழுப்புகிறார்.

இவை அனைத்தும் படத்தின் வரும் கதாபாத்திரங்களின் மூலமாக ஒரு உரையாடலின் கீழ் கொண்டு வந்திருப்பதும் மிக இயல்பாக நடந்திருக்கிறது. நேரடியாக சாதிய மனநிலையில் உள்ள ஒருவன், வெளியில் முற்போக்கு பேசிக் கொண்டு இன்னும் புத்தியின் ஏதோ ஒரு மூலையில் சாதிய அழுக்கை சுமக்கும் ஒருவன், பெண்கள் மீதே வந்து எல்லா ஒழுக்கமும், கௌரவமும் சுமத்தப்படுவது என பல பல விஷயங்கள் பற்றி உரையாடியிருக்கிறது படம்.

இந்தப் படமே மிகப்பெரிய உரையாடலுக்கான களம் என்பதால் படத்தின் பல முக்கியமான விஷயங்களை வசனத்தின் மூலம் கடத்த முயன்றிருக்கிறார். அது படம் பார்க்கும் போது சிறிய சோர்வைத் தருகிறது. இன்னும் கூட சிலவற்றை உணர்வு ரீதியாக கடத்தியிருக்கலாமே என்ற எண்ணம் எழுகிறது. உதாரணமாக கலையரசனின் மனமாற்றம் தீடீரென ஒரு நொடியில் நிகழ்கிறது. அவனை அப்படி மாறச் செய்தது எது என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். இளையராஜா பற்றி துஷாரா - காளிதாஸ் மத்தியில் நிகழும் உரையாடல் இன்னும் கூட தெளிவாக சொல்லப்பட்டிருக்கலாம். இங்கு குறியீடுகள் மூலம் சொல்லி புரிய வைப்பதற்கான அவகாசம் இல்லை என்பதால் வசனங்கள் மூலம் சற்று உரக்கப் பேசியிருக்கிறார் என்றாலும் காட்சிகள் மூலமும், உணர்வுகள் மூலமும் படம் நகர்த்தப்பட்டிருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்கும். படத்தின் இறுதிப் பகுதியில் அறிமுகமாகும் புதிய கதாப்பாத்திரமும் மிக துருத்தலாக கதையில் இணைத்திருந்தது சற்று உறுத்தலாக இருந்தது.

ஒரு சைக்கடெலிக் மனநிலையிலான காட்சிகள் படத்தை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றி இருக்கிறது. குறிப்பாக காளிதாஸ் - துஷாரா இடையேயான காதல் கதை முன்னும் பின்னுமாக சொல்லப்படும் உத்தி கவர்கிறது. இப்படியான பல யோசனைகளுக்கு அழகாக வடிவம் கொடுத்திருக்கிறது கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு, செல்வாவின் படத்தொகுப்பு. டென்மாவின் இசை ராஜ்ஜியம் படம் முழுக்க நிறைந்திருக்கிறது. பருவமே பாடலின் துள்ளலும், ஒப்பாரி வடிவத்திலான ஜனமே பாடல் மூலம் சமூகத்தில் நிகழ்ந்த ஆணவக் கொலைகள் சொல்லப்படுவது, நாடக ஒத்திகையின் போது ஒலிக்கும் தீம் ம்யூசிக், படத்தின் இறுதியில் வரும் நட்சத்திரம் நகர்கிறது பாடல் என ஒவ்வொன்றும் மனதைத் தொடுகிறது.

இது இரஞ்சித்திடம் இருந்து வந்திருக்கும் புது விதமான சினிமா என்று மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. தமிழ் சினிமாவிலும் புதிய திறப்பு. தவிர்க்கவே முடியாத ஒரு உரையாடலை 'நட்சத்திரம் நகர்கிறது' மூலம் துவங்கி வைத்திருக்கிறார். இனிமேல் இது பற்றி பலரும் பேசுவார்கள் என உறுதியாக.

- ஜான்சன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com