X MEN 97 | அதே குரலில் சீக்குவல்... எப்படியிருக்கிறது X MEN 97..?
X MEN 97(3 / 5)
97ல் முடிந்த காமிக்ஸ் டிவி தொடரை மீண்டும் தூசி தட்டியிருக்கிறது மார்வெல். ஹாட்ஸ்டாரில் வாரம் ஒரு எபிசோடு (முதல் வாரம் மட்டும் இரண்டு எபிசோடு) என இந்த சீரிஸை வெளியிடவிருக்கிறார்கள். இனி ஒவ்வொரு புதன்கிழமை ஒரு எபிசோடு வெளியாகும்.
சார்லஸ் சேவியரின் (சார்லஸ் X ஏவியர் என அவர்கள் சொல்லிக்கொண்டாலும், நமக்கு சேவியர் என்று தான் சொல்ல வருகிறது) மறைவுக்குப் பின்னர், X MENஐ வழிநடத்தும் பொறுப்பு சைக்ளாப்ஸ் தலையில் விழுகிறது. 'அன்பாலே அழகான வீடு' என சைக்ளாப்ஸ், ஜீன் , புதிதாக பிறந்த அவர்களின் குழந்தை நாதன் என மூவரும் நல்ல நாள் பார்த்து X MEN கூட்டத்திடமிருந்து தப்பித்து , ' இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடுவோம் ' என நிம்மதியாக வாழ முடிவு செய்கிறார்கள். . ஆனால், அதற்குள் X MEN குழுவின் பரம எதிரியான மேக்னெட்டோ உள்ளே வந்துவிடுகிறார். இனி, எல்லோரும் அண்ணன் கையில் தான் முத்தம் கொடுக்க வேண்டும். 'அதுதான் என் கட்டளை, அதுவே சாசனம் ' என சேவியர் விட்டுச் சென்ற உயிலைக் காட்ட திக்கற்று நிற்கிறது X MEN கூட்டம். இதற்கிடையே UN தரும் அக்கப்போருகள், பழைய பரம்பரை வில்லன்கள், X men குழுவில் கால் வைக்கும் புதிய ம்யூட்டன்ட்கள் என கலவையாக இந்தத் தொடரை இயக்கியிருக்கிறார்கள். ஜீன் கதாபாத்திரம் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.
1992-1997ல் வெளியான இந்த காமிக்ஸ் தொடரை மீண்டும் எடுக்க நினைக்கிறார் இதன் இயக்குநரான லேரி ஹௌஸ்டன். தொலைத்த இடத்தில் தானே தேட முடியும் என்பது போல, விட்ட இடத்திலிருந்து தொடங்கலாம் என முடிவு செய்கிறார்கள். மார்வெல் நிறுவனம் ஏற்கெனவே ஹாட்ஸ்டாரில் What if என்னும் காமிக்ஸ் தொடரை வெளியிட்டு வருகிறது. அடுத்த என்ன செய்யலாம் என யோசனையில் இறங்கிய போது, ' மீண்டும் X MEN 97ஐ எடுக்கலாம் ' என ஐடியா உதித்திருக்கிறது. அட எடுக்கலாமே களத்தில் குதித்திருக்கிறார்கள். XMEN படங்களுக்கென என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. மார்வெல் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் 20th century fox நிறுவனத்திடமிருந்து XMEN ரைட்ஸை வாங்கியிருந்தார்கள்.
சீரிஸின் முதல் பலம், 92ல் காமிக்ஸ் வெளியானபோது யாரெல்லாம் குரலுதவி செய்தார்களோ அவர்களையே மீண்டும் பேச வைத்ததுதான். துணிச்சலான முடிவு. 2டி அனிமேசனும் சிறப்பாக வந்திருக்கிறது. எபிசோடுக்கு ஒரு வில்லன். மற்றபடி தொடர்கதை பாணியில் ஓரளவுக்கு சிறப்பாகவே எழுதியிருக்கிறார்கள்.
XMEN ரசிகர்கள் நிச்சயம் பார்க்கலாம். நல்லதொரு நாஸ்டால்ஜியா அனுபவத்தை இந்த சீரிஸ் தரும்.