இந்த வாரம் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள், சீரிஸ், டாக்குமெண்டரி குறித்த தொகுப்பு.
ஒரு பெண் வேம்பையருக்கு பல் பிரச்சனை ஏற்பட்டு கொல்கத்தாவில் ஒரு பல் மருத்துவரிடம் செல்கிறாள். அந்த சந்திப்பு பின்பு காதலாக மாறுகிறது. இதன் பின் நடப்பவை தான் இந்த `டூத் பரி’ சீரிஸ்.
கேட் வைலர் ஒரு அசாதாரண சூழலில் மிகப் பெரிய பொறுப்பை சுமக்க நேர்கிறது. லண்டனின் அம்பாசிடர் என்ற அந்தப் பொறுப்பும், அரசியல் சூழலும் அவரது வாழ்க்கையில் என்ன மாற்றங்களைக் கொண்டு வருகிறது என்பதே கதை.
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இந்த முறை ஒரு வெப் சீரிஸுடன் வந்திருக்கிறார். தாரா என்ற பள்ளி மாணவி காணாமல் போய் பிணமாக மீட்கப்படுகிறாள். இந்த கொலையை செய்தது யார் எனக் கண்டுபிடிக்க அவளது பள்ளி நண்பர்களே இறங்குகிறார்கள். கண்டுபிடிக்கிறார்களா? என்பதுதான் கதை. நடிகை அபிராமி இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
டெம்பிள் மங்கீஸ் டீமின் ஒரு மினி சீரிஸ் இந்த `டிடெக்டிவ் ரமேஷ்’. பீரியட் கதையாக உருவாகியுள்ள இந்த சீரிஸில் டிடெக்டிவ் ரமேஷ் எப்படி ஒரு மர்மமான கொலை கேஸை கண்டுபிடிக்கிறார் என்பதை சொல்கிறார்கள்.
அரவிந்த் சுக்லா என்ற இளைஞன் சிவில் சரீஸ் படிப்புக்காக நகரத்துக்கு வருகிறார். ஆனால் கல்லூரியில் நடக்கும் அரசியலும், அதிகாரப் போட்டியும் அவரை வேறு பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இறுதியில் அவருக்கு என்ன நடக்கிறது என்பதே `கர்மி’ சீரிஸின் கதை.
எலியட் - பேவர்லி இருவரும் இரட்டையர்கள். இரண்டு பெண்களும் மகப்பேறு மருத்துவர்கள். குழந்தை பிறப்பு பற்றிய இவர்களின் ஆராய்ச்சி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றால் என்ன சிக்கல்கள் வருகிறது என்பதே கதை. இரட்டை வேடத்தில் ரேச்சல் வெய்ஸ் நடித்திருக்கிறார். 1988 படமாக வெளியான Dead Ringers தான் இப்போது அதே பெயரில் சில மாற்றங்களுடன் சீரிஸாக உருவாகியிருக்கிறது. அதில் ஆண் இரட்டையர்கள் லீட் ரோலில் வருவார்கள். இதில் பெண் இரட்டையர்கள்.
உகாண்டா காடுகளில் வாழும் சிம்பன்ஸி குரங்குகள் பற்றிய ஆவணப்படம் தான் இந்த `சிம்ப் எம்பையர்’. அவைகளின் குடும்ப அமைப்பு, சமூக நடவடிக்கை, எல்லை வகுப்பது எனப் பலவற்றையும் இதில் பதிவு செய்திருக்கிறார்கள். அமெரிக்க நடிகர் Mahershala Ali தனது குரலால் இந்த ஆவணப்படத்திற்கு விவரணை கொடுத்திருக்கிறார்.
க்றிஸ் ஈவ்ஸ், அனா டி அர்மாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `கோஸ்டட்’. சடி என்ற துருதுரு இளைஞனைப் பார்த்ததும் காதல் கொள்கிறாள் கோல். ஆனால் கோல் ஒரு சீக்ரெட் ஏஜெண்ட். அவர்களது டேட்டிங், உலகைக் காப்பாற்றும் ஒரு அட்வெஞ்சர் பயணமாக மாறுகிறது. என்ன? ஏன்? எதற்கு என்பதுதான் படம்.
ட்ராவல் ஏஜென்சியில் பணியாற்றும் அமண்டாவுக்கு பர்சனல் வாழ்க்கையில் பல பிரச்சனைகள். அப்போது வியட்நாம் சென்று அங்குள்ள சுற்றுலா துறையை பற்றி அறிந்து வர ஒரு வாய்ப்பு அமைகிறது. வியட்நாமில் அவர் சந்திக்கும் ஒரு டூர் கைடு, அவருடன் ஏற்படும் நட்பு என செல்லும் கதை அமண்டாவின் வாழ்வில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது எனச் செல்கிறது.
பிபின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மலையாளப்படம் `வெடிகட்டு’ மஞ்சபரா - கரிங்கோட்டா இரு ஊரும் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் திருவிழாவின் போது மட்டுமே ஒற்றுமையாக இருக்கும். மற்றபடி எப்போதும் மோதலே. இந்த சூழலில் இரண்டு ஊருக்கும் இடையில் ஒரு காதல் முளைக்கிறது. இந்த சண்டையெல்லாம் கடந்து அந்தக் காதல் வெல்கிறதா என்பதுதான் கதை.
உலகம் முழுக்க ரெசிடண்ட் ஈவில் பட வரிசைக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. 2016ல் வெளியான ஆறாவது பாகத்தோடு ரெசிடண்ட் ஈவிலுக்கு முற்றும் போட்டார்கள். இப்போது மறுபடி ரீபூட் செய்து புது மறுபடியும் மொதல்ல இருந்தா என்றபடி Resident Evil: Welcome To Raccoon City 2021ல் வெளியானது. 1998ல் ரக்கூன் நகரத்தின் அழிவு எப்படி ஆரம்பித்தது என்பதை சொல்லியிருந்தது படம்.
ஆஷிக் அபூ இயக்கத்தில் டொவினோ தாமஸ், ரீமா கல்லீங்கல், ரோஷன் மேத்திவ் நடித்திருக்கும் மலையாளப் படம் ` நீலவெளிச்சம்’. வைக்கம் முகமது பஷீர் எழுதிய நீலவெளிச்சம் சிறுகதையின் திரைப்பட வடிவமே இது. தனித் தீவாக இருக்கும் மேன்ஷன் ஒன்றில் தங்க செல்கிறார் இளம் எழுத்தாளர். அங்கு காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் ஆவி இருக்கிறது எனத் தகவல். அந்த எழுத்தாளர் என்ன மாதிரியான அனுபவங்களை சந்திக்கிறார் என்பதே படத்தின் கதை.
பாபு யோகேஷ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தமிழரசன். ரிலீஸ் தள்ளித் தள்ளி போய் இந்த வாரம் படம் வெளியாகிறது. போலீஸ் விஜய் ஆண்டனி ஒரு மருத்துமனையை ஹைஜாக் செய்கிறார். ஏன் எதற்கு என்பதுதான் படம். படத்துக்கு இசை இளையராஜா.
விமல் நடிப்பில் நிர்மல்குமார் இயக்கியுள்ள படம் `தெய்வ மச்சான்’. தன் தங்கையின் திருமணத்தில் வரும் சிக்கல்களை சரி செய்யும் ஒரு அண்ணனின் கதைதான் படம். தங்கையாக அனிதா சம்பத் நடித்திருக்கிறார்.
ரெஜிஸ் மிதிலா இயக்கத்தில் யோகிபாபு, ரமேஷ் திலக் நடித்திருக்கும் படம் `யானை முகத்தான்’. புராண கடவுள் விநாயகராக நடித்திருக்கிறார் யோகிபாபு. இவரால் ரமேஷ் திலக் வாழ்வில் என்ன நிகழ்கிறது என்பதுதான் படம்.
தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வரலாற்றுப் புனைவு திரைப்படம் `யாத்திசை’. சேரர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையிலான போர் தான் கதைக்களம். பாண்டிய அரசர் அரிகேசரிக்குப் பிறகு பொறுப்பிற்கு வரும் ரணதீரன் சேரர்களை எப்படி எதிர்த்து போரிடுகிறார் என்பதே கதை.
கார்த்திக் இயக்கத்தில் சாய் தரம் தேஜ், சம்யுக்தா நடித்துள்ள தெலுங்குப் படம் `விருபக்ஷா’. 90களில் ருத்ரவனம் என்ற கிராமத்தில் நடக்கும் மர்மங்கள் தான் படத்தின் களம். அங்கு நடக்கும் அமானுஷ்யமான விஷயங்களில் இருந்து அந்த கிராமத்தை ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை. படத்துக்கு `புஷ்பா’ புகழ் சுகுமார் தான் திரைக்கதை எழுதியிருக்கிறார்.
இர்ஷாத் பராரி இயக்கத்தில் சௌபின் சாஹிர், நிகிலா விமல், லிஜோ மோல் ஜோஷ் நடித்திருக்கும் மலையாளப்படம் `அயல்வாஷி’. சில குழப்பங்களால் நண்பர்களாக இருந்த தஜுதீன் - பென்னிக்கு இடையில் விரிசல் விழுகிறது. இதை சரிசெய்ய தஜூதின் செய்யும் முயற்சிகள் நன்மையில் முடிகிறதா? இல்லையா? என்பதே கதை.
பாலிவுட் சினிமா இந்த முறை கைவைத்திருக்கும் ஃபர்னிச்சர் அஜித் - சிவா கூட்டணியில் உருவான தமிழ் சினிமா `வீரம்’. இதனை சல்மான் கான் - பூஜா ஹெக்டேவை வைத்து இந்தியில் ரீமேக்கி இருக்கிறார் ஃபர்ஹாத் சம்ஜி. தமிழில் அப்பாவாக இருந்த ரோலை இந்தியில் அண்ணனாக மாற்றி அதில் தெலுங்கு வெங்கடேஷை நடிக்க வைத்திருக்கிறார். இந்த ரம்ஜான் சல்லுபாய்க்கு ஹிட்டா எனப் பெறுத்திருந்து பார்ப்போம்.
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஹாரர் பட சீரிஸ் ஈவில் டெட். இதன் ஐந்தாவது பாகமாக `ஈவில் வெட் ரைஸ்’ படத்தை இயக்கியிருக்கிறார் லீ க்ரோனின். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் சகோதரி எல்லியை பார்க்க செல்கிறார் பெத். அங்கு நடக்கும் விபரீதம், அதைத் தொடர்ந்து நடக்கும் பேயின் தாக்குதல் தான் படம். ஹாரர் பட விரும்பிகளுக்கு ஏற்ற சாய்ஸ்