Inspector Rishi Review | தொடரும் கொலைகள்... கொலையாளியைக் கண்டுபிடித்தாரா INSPECTOR RISHI..!
Inspector Rishi(3 / 5)
கிராமத்தில் இருக்கும் சிலர் குறிவைத்து கொல்லப்படுகிறார்கள். வனரட்சி தான் அவர்களைப் பழிவாங்குவதாக ஊர் மக்கள் நம்புகிறார்கள். இத்தகைய சூழலில் அங்கு வரும் இன்ஸ்பெக்டர் ரிஷி கொலையாளியைக் கண்டுபிடித்தாரா என்பதே அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரின் ஒன்லைன்.
தமிழ்நாட்டின் ரிசர்வ் ஃபாரஸ்ட்டுகளில் ஒன்று தேன்காடு. அந்த மலைக்கிராமத்தில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. ஊர்மக்கள் கொலைகளுக்குப் பின்னால் வனரட்சி இருக்கும் என சந்தேகிக்கிறார்கள். பிணங்களையும் அதைச் சுற்றி பின்னப்படும் சிலந்திவலைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஏற்கெனவே மன ரீதியாக சிக்கித் தவிக்கும் இன்ஸ்பெக்டர் ரிஷிக்கு (நவீன் சந்திரா) இந்தக் கொலைகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பும் வந்து சேர்கிறது. மாற்றலாக வந்த ஊரில் எல்லோரும் ஏதோவொரு வகையில் வனரட்சிகளை நம்ப, ரிஷி மட்டும் அதற்குப் பின் இருக்கும் அறிவியலைத் தேட ஆரம்பிக்கிறார். சப் இன்ஸ்பெக்டர்கள் அய்யனார் (கண்ணா ரவி), சித்ரா (மாலினி ஜீவரத்னம்), வன அதிகாரிகள் சத்யா (ஸ்ரீகிருஷ்ணா தயாள்), இர்ஃபான் (இளங்கோ குமாரவேல்), கேத்தி (சுனைனா) என பலரும் ரிஷிக்கு உதவ வனரட்சியின் உண்மையையும், கொலைகளுக்கு பின்னாலிருக்கும் முடிச்சுக்களையும் ரிஷி அவிழ்த்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை. 10 எபிசோடுகள் வரை நீண்டாலும், சின்ன சின்ன கிளைக்கதைகளுடன் சுவாரஸ்யமாகவே இதை எடுத்திருக்கிறார் இயக்குநர் நந்தினி J.S.
முந்தைய வரலாற்றின் மூலம் வெளிப்படும் கூட்டுப்பலி, அமானுஷ்யங்களை நம்பும் கிராம மக்கள், வினோத வனரட்சி, சீரியல் கொலைகள் என மர்மத் தொடர்களுக்கான மீட்டரில் கச்சிதமான கதையைப் பிடித்திருக்கிறார் நந்தினி J.S . கொலைகளையும், அதற்கான காரணிகளையும் முடிந்தவரையில் சுவாரஸ்யமம் குன்றாமல் திரைக்கதையாக்கியிருக்கிறார். அந்த வகையில் அமேசான் ப்ரைமுக்கு நல்லதொரு நல்வரவு.
நவீன் சந்திரா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், சுனைனா, இளங்கோ குமாரவேல், ஸ்ரீகிருஷ்ணா தயாள் என எல்லோருக்குமே காக்கி உடை தான். தனக்கிருக்கும் மன அழுத்தத்தை வெளிப்படுத்தும் காட்சிகளாகட்டும், கொலையாளியைக் கண்டுபிடிக்க சிரத்தையுடன் அவர் எடுக்கும் முடிவுகளாகட்டும், சிறப்பாக நடித்திருக்கிறார் நவீன் சந்திரா. அவருக்கிருக்கும் அந்த 'சவாலை' வைத்து இன்னுமே நன்றாக விளையாடியிருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்னை, அதிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என ஆங்காங்கே கிளைக்கதைகள் வனரட்சியின் கைகளைப் போல நீண்டுகொண்டே இருக்கின்றன. அதில் சில தம்ஸ் அப், சில தம்ஸ் டவுன். சுனைனாவின் நடிப்பு குறித்து இன்னும் நிறைய எழுதலாம் தான். ஆனால், சமர் படத்தில் வந்த அளவே தான் இதில் சுனைனா வருவதால், அவற்றைப் பற்றி பெரிதாக ஒன்றும் இல்லை.
எழுத்தாகவும் சரி, டெக்னிக்கலாகவும் சரி நல்லதொரு சீரிஸாகவே இன்ஸ்பெக்டர் ரிஷி இருக்கிறது. ஒரேயொரு பெரும்குறை கலை இயக்கம். பிணங்கள் எல்லாம் பிளாஸ்டிக் பொம்மைகள் போல் காட்சியளிக்கின்றன. வனரட்சியின் மேக்கப்பும் சரி, பிணங்களும் சரி பெரும் சொதப்பல். அதே சமயம், எல்லோரின் வீடுகளும் அட்டகாசமாக இருக்கின்றன. என்ன அந்த கிராமத்துக்கு அந்நியப்பட்டு நிற்கிறது. அமானுஷ்யமா அறிவியலா என்னும் கேள்விக்கான விடையை பார்வையாளர்களிடமே விட்டுச்சென்றது ஸ்மார்ட் சாய்ஸ். ஆனால், நன்மை வெர்சஸ் தீமை என கதாபாத்திரங்களை பிரித்தது ஏனோ பெரிதாக ஈர்க்கவில்லை.
தொடர் கொலைகள், வனரட்சி என இந்த வீக்கெண்டுக்கு நல்லதொரு வாட்ச்சாக இந்த சீரிஸ் நிச்சயம் அமையும்.