ECHO | MCUல இது எதுக்குன்னு தெரியல... ஆனா ..?
Echo(2.5 / 5)
மாயா யார்... மாயாவின் பூர்வீகம் என்ன... இவர்களுக்கும் மார்வெல்லுக்கும் என்ன சம்பந்தம் என்பதைச் சொல்கிறது ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் எக்கோ தொடர்.
சிறுவயதிலேயே தன் தாயை இழந்த மாயா, தந்தையுடன் வளர்கிறார். சில ஆண்டுகள் கழித்து 'மாயா லோபஸ், வில்சன் ஃபிஸ்க்கின் கீழ் அடியாளாக இருக்கிறார். ஆனால், அங்கும் அடுத்தடுத்து பிரச்னைகள். தப்பிக்க இடம் தேடி தாயகம் திரும்புபவர், பின்பு தன்னுடைய அமெரிக்கப் பூர்வகுடி கலாசாரத்தில் ஒன்றி, தன்னுடைய குடும்பத்திடமும் இனக்குழுவுடனும் தன்னை இணைத்துக் கொள்கிறார். விட்ட குறை, தொட்ட குறையாகப் பகை துரத்த, அதைச் சமாளிக்க மாயா என்னும் எக்கோ செய்யும் சாகசங்கள்தான் இதன் கதை.
மாயா லோபஸ் கதாபாத்திரம் பேசும் சவால் கொண்டதொரு கதாபாத்திரம். சிறுவயது விபத்தில் ஒரு காலும் பறிபோயிருக்கும். இப்படியான கதாபாத்திரத்திற்கு இத்தகைய சவால்களைக் கொண்ட ஒருவரையே தேர்வு செய்தது மார்வெல்லின் போல்டான முடிவு. மாயா லோபஸ் எனப்படும் எக்கோவாக அலக்குவா காக்ஸ். இயற்கையிலேயே செவித்திறன் சவால் உடைய அலக்குவா, பிராஸ்தெடிக் காலும் பொருத்தியவர் அலக்குவா காக்ஸ். இதனாலேயே ஹாக் தொடரின் போதே அலக்குவாவின் கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டது. 'ஹாக் ஐ' தொடர் சமயத்தில் இவருக்காக ஜெர்மி ரென்னரும், ஹெய்லி ஸ்டெய்ன்ஃபெல்டும் American sign languageஐ கற்றுக்கொண்டதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
ஹாக் ஐ தொடரில் கொஞ்சம் extended cameo என்றாலும், இதில் நடிக்கவும், அடிக்கவும் அலக்குவாவுக்கு அத்தனை வாய்ப்புகள். அதிரடியில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ண்டைக் காட்சிகளுக்கு அவர் கொடுத்திருக்கும் உழைப்பு கற்பனைக்கு அப்பாற்பட்டது. நடிப்பு தான் சற்று ஓக்கே ரகம். ஆனால், கதாபாத்திரத்தின் தன்மையே அப்படித்தானா என்கிற கேள்வி எழுவதால், அதிலும் அலக்குவாவுக்கு நிச்சயம் பாஸ் மார்க் கொடுக்கலாம்.
கிங்க்பின் எனப்படும் வில்சன் ஃபிஸ்க் ரோலை மீண்டும் ஏற்றிருக்கிறார் வின்சன்ட் டோனோஃப்ரியோ. இவருக்கும், மாயா லோபஸுக்குமான பிணைப்பு ஒரு ஃபிளாஷ்பேக் காட்சியில் அட்டகாசமாக சொல்லப்படுகிறது. ஆனால், அதன்பின்னர் இருவரும் ஏன் மாறி மாறி கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இன்னும் கதைக்குழு தெளிவாக எழுதியிருக்கலாம். இந்த போதாமை தொடரை கீழிறக்கிவிடுகிறது.
டெக்னிக்கலாக இந்தத் தொடரும் ' குறையொன்றும் மார்வெல் கண்ணா' லெவல் தான். அதிலும் அமெரிக்க சைகை மொழிக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து இணைத்திருப்பது கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மைக்கு வழிவகுக்கிறது. MMA ரக சண்டைகள்தான் மாயாவின் ப்ளஸ் என்றாலும் 'ஆல் ஆக்ஷன்' வகை சண்டைக் காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் மாயாவின் பின்கதை, குறிப்பாகச் சிறுவயதில் அவருக்கு பாணியுடன் ஏற்படும் பிரிவு, மீண்டும் வந்ததும் தன் குடும்பத்துடனும் கலாசாரத்துடனும் ஏற்படும் பிணைப்பு என அக உணர்வுகளுக்கும் மதிப்பளித்து திரைக்கதை அமைத்திருப்பது மற்றொரு ப்ளஸ்!
மார்வெல் சினிமேட்டிக் யுனிவர்ஸிற்கு இது கொஞ்சம் குழப்பமான காலம். ' தொட்டதெல்லாம் தூள் பறக்குது மம்பட்டியான்' மோடில் சுற்றிக்கொண்டிருந்த மார்வெலுக்கு தானோஸ் இறந்த பின்னர், நிறைய அடிகள். எடெர்னல்ஸும், பிளாக் பேந்தர் : வக்காண்டா ஃபார்வரும் படங்கள் வரிசையில் பதம்பார்க்க, ஹாக் ஐயும், ஷீ ஹல்க்கும் தொடர்கள் வரிசையில் சோதித்தது. ஹாக் ஐயிலாவது ரிலே குச்சியை கேட் பிஷப்பிடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு குட்டி லெவல் லாஜிக் இருந்தது. மற்றவற்றில் எல்லாம் அதுகூட இல்லை. போதாக்குறைக்கு ஜோனாத்தான் மேயர்ஸ் பஞ்சாயத்து வேறு மார்வெல்லுக்கு ஓவர் குடைச்சல் கொடுத்துவந்தது. இப்படியான சூழலில் தான் எக்கோவை இறக்கியிருந்தார்கள். ஒரே நாளில் ஐந்து எபிசோடுகளையும் வெளியிட, என்னடா இது என்றுதான் முதலில் தோன்றியது.
பார்க்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, ஏற்கெனவே இந்தக் காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோமே என நினைவுக்கு வர, ' அட இது ஹாக் ஐல வந்து எக்கோஸ் எபிசோட்ல' என மூளைக்குள் சட்டென ஃபிளாஷ்பேக் மின்னி மறைந்தது. ஆம், அந்தத் தொடரில் வந்த சில காட்சிகளை அப்படியே இதில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஸ்மார்ட் சாய்ஸ் ப்ரோ. ஆனால், அதைவிட டேர்டெவில் கதாபாத்திரம் கொடுக்கும் என்ட்ரி தான் அப்ளாஸ் அள்ளும் விதமாக அமைந்தது.
மொத்தத்தில் இது சிறப்பான தொடரா, MCU டைம்லைன் புரிய கட்டாயம் பார்க்க வேண்டுமா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால், அதிரடி சண்டைக்காட்சிகள், மாயா லோப்பஸ் யார், அவர்களின் பூர்விகம் என்ன, மாயா லோபஸிற்கு இருக்கும் சூப்பர் பவர் என்ன, போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய மார்வெல் ஃபேன்ஸ் இதை நிச்சயம் பார்க்கலாம்.