ஓடிடியில் 13+, 16+, அடல்ட் என திரைப்படங்களை வகைப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் உள்ளடக்கம், சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கான புதிய விதிகளை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர், “ஓடிடி நிறுவனங்களுக்கு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. நாட்டில் அனைவருக்கும் சுதந்திரம் இருக்கிறது; ஆனால் அதற்கென்று சில வரைமுறைகளும் உள்ளது.
தற்போது உருவாக்கப்பட்ட ஓடிடி தளங்களுக்கான விதிமுறைகளில் சில புதிய மாற்றங்கள் கடுமையான மேற்பார்வை பொறிமுறையை உள்ளடக்கியது, மேலும், இந்த ஓடிடி தளங்களில் "இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும்" பாதிக்கும் மற்றும் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் உள்ளடக்கத்தை ஒளிபரப்ப தடை விதிக்கப்படும்.
ஓடிடி-ஐப் பொறுத்தவரை, 13+, 16+ மற்றும் அடல்ட் என்று உள்ளடக்கத்தின் சுய வகைப்பாடு இருக்க வேண்டும். மேலும் குழந்தைகள் அதைப் பார்க்காத வகையில் பெற்றோர்கள் இந்த தளங்களை மூடிவைப்பதற்கான ஒரு வழிமுறை இருக்க வேண்டும்” என அறிவித்தனர்.
மேலும்“ ஓடிடி இயங்குதளங்களுக்கு மூன்று அடுக்கு பொறிமுறையை வைத்திருக்க முடிவு செய்துள்ளோம். இத்தகைய தளங்கள் அவற்றின் விவரங்களை வெளியிட வேண்டும். நாங்கள் இவற்றை பதிவு செய்ய கட்டாயப்படுத்தவில்லை, ஆனால் நாங்கள் இது தொடர்பான தகவல்களைத் கேட்கிறோம். முக்கியமாக OTT இயங்குதளங்கள் மற்றும் டிஜிட்டல் போர்ட்டல்களில் குறை தீர்க்கும் முறை இருக்க வேண்டும். இந்த தளங்களில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது இந்த பிரிவில் மிகவும் மதிப்புமிக்க நபர் தலைமையில் ஒரு சுய-கட்டுப்பாட்டு அமைப்பு இருக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்