பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால் அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆஸ்கர் விருது வென்ற புகழ் பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவர்களுடன் தவறாக நடக்க முயற்சித்ததாகவும், கடந்த வாரம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது. அதன் பிறகு ஏஞ்சலினா ஜோலி, கைனெத் பால்ட்ரோ, காரா டெலவிங்னி உள்பட ஹாலிவுட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகைகள் பலர் வெயின்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் ஹாலிவுட் திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி, அமெரிக்க அரசியல்வாதிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மனம் உடைந்து போன மனைவியும் வெயின்ஸ்டீனை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதுவரை நெருக்கமாக இருந்த நடிகர்கள், நண்பர்கள், தயாரிப்பாளர்களும் கூட அவருடனான உறவை முறித்துக் கொள்ளும் வகையில் பேசி வருகின்றனர். நட்பாக பழகி வந்த அரசியல்வாதிகள் கூட தற்போது அவருக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக அதிபர் தேர்தலின் போது பரப்புரைக்காக பெற்ற நன்கொடையை திருப்பி அளிக்கப் போவதாக ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்கா முழுவதும் வெய்ன்ஸ்டீனின் செல்வாக்கு சரியத் தொடங்கியுள்ளது.
இந்தச் சூழலில் வெயின்ஸ்டீனுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை நிச்சயம் கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என சட்டத் துறை வல்லநுர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாஃப்தா என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் திரைப்பட அகாடெமி வெயின்ஸ்டீனை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ள நிலையில், தற்போது ஆஸ்கர் அகாடெமியும் அவருக்கு எதிராக போர்கொடி தூக்க முன்வந்துள்ளது. வரும் சனிக்கிழமை அன்று கூடி அவரது எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்போவதாக ஆஸ்கர் அகாடெமி அறிவித்துள்ளது.