ஹாலிவுட் படவுலகின் பழம்பெரும் நடிகையும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவருமான ஒலிவியா டி ஹேவிலேண்ட் வயது முதிர்வின் காரணமாக பாரிஸ் நகரில் மறைந்தார். அவருக்கு வயது 104. தம் நடிப்புக்காலத்தில் சிறந்த நடிகைக்கான இரண்டு ஆஸ்கர் விருதுகளை அவர் வென்றுள்ளார். 1946 மற்றும் 1949 ஆம் ஆண்டுகளில் வெளியான டு ஈச் ஹிஸ் ஓன் மற்றும் த ஹேர்ரஸ் போன்ற படங்களுக்காக விருதுகள் வழங்கப்பட்டன.
டோக்கியாவில் பிறந்த நடிகை ஹேவிலேண்ட், பின்னர் கலிபோர்னியாவில் வளர்ந்தார். ஷேக்ஸ்பியரின் மிட்சம்மர் நைட்ஸ் ஸ்ட்ரீம் என்ற நாடகத்தின் தழுவலில் 1935இல் எடுக்கப்பட்ட படத்தில் முதலில் அறிமுகமானார்.
ஹேவிலேண்ட்டின் சிறப்பு ஆத்மார்த்தமான அவரது அழகு எனச் சொல்லப்படுகிறது. “மோசமான பெண்ணாக நடிப்பது சலிப்புத்தரக்கூடியது” என்று ஒருமுறை கூறியிருந்தார். "நல்ல பெண்ணாக நடிப்பதில் எனக்கு எப்போதும் அதிர்ஷ்டம் உண்டு. ஏனென்றால் அவர்களுக்கு ஒரு நடிகையை மீறிய தன்மைகள் வேண்டும்” என்றார்.
ஹேவிலேண்டின் மென்மையான வெளித்தோற்றம் அவரது எஃகு போன்ற மனவலிமையை மறைத்துக்கொண்டிருந்ததாக திரைப்பட விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 1940 ஆம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக வழக்குத்தொடர்ந்தார். அதன்மூலம் இறுகிக்கிடந்த ஸ்டுடியோ முறைகள் தகர்ந்தன.
“இந்த வழக்கில் தோற்றாலோ ஜெயித்தாலோ மீண்டும் உங்களுடன் பணியாற்றமாட்டேன் என்று உறுதியாகக் கூறினேன். நான் வென்றபோது அவர்கள் ஈர்க்கப்பட்டனர். ஆனால் அந்தக் கசப்பை மறக்கவில்லை” என்று பின்னர் நினைவுகூர்ந்தார். பிற்கால வாழ்க்கையில், பெரும்பாலும் நடிப்பு அதன் கவர்ச்சியை இழந்துவிட்டது என்ற நடிகை ஹேவிலேண்ட், "வாழ்க்கை மிகவும் முக்கியத்துவமிக்க நிகழ்வுகளால் நிறைந்துள்ளது" என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.
"நான் ஒருமுறை செய்ததைப்போல, மீண்டும் அந்த பேண்டஸி வாழ்க்கை தேவையில்லை. அதுதான் கற்பனையின் வாழ்க்கை, அதற்கான ஒரு பெரிய தேவை எனக்கு இருந்தது. அந்தத் தேவையை அடைவதற்கான மிகச் சரியான வழிமுறையாக திரைப்படங்கள் இருந்தன” என்று அனுபவங்களைப் பேசிய நடிகை ஹேவிலெண்ட் காற்றில் கலந்துவிட்டார்.