‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, ரசிகர்கள் இந்தப் படத்தினை கொண்டாடி வரும் நிலையில், கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடல், நடிகர் விஜய் வீட்டில் வருமானவரிச் சோதனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே, ‘மாஸ்டர்’ திரைப்படம் எப்படி சாதனை புரிந்தது என்பது குறித்த சிறு தகவலை இங்குக் காணலாம்.
‘மாநகரம்’, ‘கைதி’ என்ற வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட, திரைப்படங்களை உருவாக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது 3-வது படமாக இயக்கியதுதான் ‘மாஸ்டர்’ திரைப்படம். முதல் இரண்டு படங்களிலேயே கவனிக்கத்தக்க இயக்குநராக மாறியநிலையில், தமிழ் திரையுலகின் மாஸ் ஹீரோவான விஜயை வைத்து, லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டதும்தான் தாமதம், ‘மாஸ்டர்’ படத்தின் மீது எதிர்பார்ப்புகள் எகிறியது.
அதிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களை அசால்ட்டாக நடிக்கும் விஜய் சேதுபதி, ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் வில்லன் என்றதும், இரண்டு விஜய்கள் இருந்ததால், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும், இந்தப் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை கிளப்பியது. மேலும், ‘கைதி’யில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் மிரட்டிய அர்ஜூன்தாஸ், மூத்த நடிகரும், இயக்குநருமான நாசர், முன்னணி நடிகையான ஆண்ட்ரியா, ‘பேட்ட’ படத்தில் பரவலாக அறியப்பட்ட மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், மகேந்திரன், கௌரி கிஷன் உள்ளிட்ட திரைப்பட்டாளமே இந்தப் படத்தில் நடித்தனர்.
‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, சென்னை, நெய்வேலி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதில், நெய்வேலி படப்பிடிப்பின்போதுதான், சென்னை அருகே பனையூரில் நடிகர் விஜய் வீட்டில் வருமானவரிச் சோதனை நடந்தது. நடிகர் விஜயின் ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம், ‘பிகில்’ படத் தயாரிப்புக்கு நிதி அளித்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜய் வீட்டில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி சோதனை நடைபெற்றது.
இதையடுத்து நெய்வேலியில் என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை, படப்பிடிப்பு தளத்திலேயே நேரில் சந்தித்து வருமான வரித்துறையினர் சம்மன் அளித்தனர். பின்னர், அவர் அங்கிருந்து வருமான வரித்துறையினர் காரின் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 23 மணிநேரம் நடந்த சோதனை, பிப்ரவரி 6-ம் தேதி நிறைவுபெற்றது.
வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு தங்களுடன் வருமாறு அழைத்தப்போது, அதற்கு விஜய், `ஈவ்னிங் ஷூட்டிங் முடிந்ததும் நேராக வருகிறேனே?' என்று பதிலளித்திருக்கிறார். ஆனால், தங்களுடன் உடனே வருமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருந்ததும், விஜய் தனது காரில் வர அனுமதி மறுத்ததும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கு, அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். பா.ஜ.க., நடிகர் விஜயை வருமான வரி சோதனையின் மூலம் மிரட்டிப் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. நடிகர் விஜய் இல்லாததால் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
வருமானவரி விசாரணைக்குப் பின்னர் உடனடியாக, நெய்வேலி திரும்பிய நடிகர் விஜய், ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டார். எனினும், சர்ச்சைகள் அதன்பிறகும் ஓய்ந்த பாடில்லை. என்.எல்.சி. நிர்வாகம் ‘மாஸ்டர்’ படத்திற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு என, பா.ஜ.க.வை சேர்ந்த சரவண சுந்தரம் தலைமையில், சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தை, கடந்த பிப்ரவரி 7-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்துவதை அறிந்த விஜய் ரசிகர்கள், படப்பிடிப்பு நடைபெற்ற,என்.எல்.சி. 2-வது சுரங்கம் உள்ள பகுதியில், விஜய்க்கும், படக்குழுவிற்கும் ஆதரவாக குவிந்தனர். பா.ஜ.க. போராட்டத்தை தொடர்ந்து ஏராளமான விஜய் ரசிகர்களும் திரண்டதால், அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. பாதுகாப்பு கருதி ரசிகர்களை கலைக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தினமும் மாலையில் விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடும் என்றாலும், வருமானவரிச் சோதனைக்குப் பிறகு, விஜய்யைப் பார்க்க அதிக அளவில் கூட்டம் கூடியது. அப்போது படப்பிடிப்புத் தளத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது ஏறி, ரசிகர்கள் கூட்டத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் விஜய்.
இந்த செல்ஃபி, விஜய் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டது. பின்னர், அது பெரும் வைரலானது. ரசிகர்கள் பகிர்ந்தது மட்டுமன்றி, பிரபலங்கள் பலரும் பகிர்ந்தார்கள். இந்த செல்ஃபிதான் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் அதிகம் பேர் ரீ-ட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது. இதற்கு முன்னதாக ஷாரூக் கான் வெளியிட்ட ட்வீட்தான் முதலிடத்தில் இருந்தது. அதைப் பின்னுக்குத் தள்ளி விஜய் வெளியிட்ட ட்வீட் முதலிடத்தைப் பிடித்தது. இதனை விஜய் ரசிகர்கள் #INDIAsMostRTedVIJAYSelfie என்ற ஹேஷ்டேகில் ட்விட்டர் தளத்தில் கொண்டாடி வந்தனர்.
ஒருவழியாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில் வெளியாக இருந்தநிலையில், சரியாக இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டும் மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. பின்பு அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொஞ்சம் இந்த தொற்று பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில், திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் மத்தியில் கொரோனா பயம் அதிக அளவில் இருந்ததால் திரையரங்கை நோக்கி மக்கள் வரத் தயங்கினர்.
அதன்பிறகு, ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் அன்று ‘மாஸ்டர்’ படம் வெளியாகும் என்று அறிவிப்பு வந்தது. இதற்கிடையில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட அனைத்து நிறுவனங்களும் மிகப் பெரிய விலை கொடுத்து வாங்க தயாராக இருந்தன. ஆனால் விஜய் இந்தப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியாக வேண்டும் என்று குறிக்கோளுடன் இருந்தார். கிட்டதட்ட திரையரங்குகள் திறந்து மூன்று மாதங்களாகியும் மக்கள் கூட்டம் வராததால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகப் பெரிய பயம் ஏற்பட்டது. இதேநிலை நீடித்தால், இனி திரையரங்கை மூடுவது தவிர வேறு வழியில்லை என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில், ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு 100 தசவீத பார்வையாளர்களை, திரையரங்கில் அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை டிசம்பர் 27-ம் தேதி சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதும், மருத்துவர்கள் உள்பட பலர் எதிர்ப்பு இந்த அறிவிப்புக்கு தெரிவித்தனர். இதனால், கொரோனா காலத்தில் மக்கள் கூட்டம் எவ்வாறு இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் அஞ்சினர். ஆனால், நடந்தது வேறு. திட்டமிட்டப்படி ஜனவரி 13-ம் தேதி ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியானது. விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இறப்பின் தறுவாயில் இருக்கும் ஒருவருக்கு, உயிர் கொடுப்பது போல திரையரங்கிற்கு உயிர் கொடுத்தது விஜயின் ‘மாஸ்டர்’ என்று அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் கூறினர். விஜயின் செல்ஃபி சாதனை படைத்தநிலையில், படமும் வசூல் சாதனை படைத்தது. ட்விட்டர் தளத்தில் கடந்த ஆண்டு அதிக முறை ட்வீட் செய்யப்பட்ட படமாகவும் ‘மாஸ்டர்’ அறிவிக்கப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, ‘வாத்தி கம்மிங்’ பாடல், 305 மில்லியன் ரசிகர்களால், யூடியூபில் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் திரையரங்குகளில், 2021-ம் ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்கள் பற்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டது. அதில், அனைத்திலும் ‘மாஸ்டர்’ திரைப்படம் முதலிடத்தைப் பிடித்திருந்தது. படம் வெளியாகி ஒரு வருடமாகியும் இன்றளவும், ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற பாடல்களும், விஜய்யின் கதாபாத்திரம் மக்களிடையே பேசப்பட்டு வருகிறது. விஜய், விஜய்சேதுபதி ஆகிய இருவரையுமே புதிய நடிப்பு, உடல்மொழி ஆகியவற்றில் முற்றிலும் புதிய கோணத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காட்டியிருந்ததும் இதற்குக் காரணம்.
‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "‘மாஸ்டர்’ வெளியாகி ஓராண்டு நிறைவு. மிக்க நன்றி விஜய் அண்ணா மற்றும் விஜய் சேதுபதி அண்ணா! மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நன்றி. ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று லோகேஷ் கூறியுள்ளார். இதேபோல், படப்பிடிப்புக்கு பின்னால் நடைபெற்ற சண்டைக்காட்சிகள் தொடர்பான இனிய நிகழ்வுகளை விஜய் சேதுபதி தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.