பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி தனது கடமையை செய்த காவலருக்கு நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்து வரும் நிலையில், சி.ஐ.எஸ்.எஃப் படை அவருக்கு வெகுமதி அளித்துள்ளது.
சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'டைகர் 3'. ரஷ்யாவில் நடந்து வரும் இதன் படபிடிப்பில் கலந்துகொள்ள, சில நாட்கள் முன் நடிகர் சல்மான் கான் மும்பை விமான நிலையம் வந்திருந்தார். விமான நிலையத்தில் அதிகாரிகளின் சோதனைக்கு நிற்காமல் நேராக உள்ளே நுழைய முயன்ற சல்மான் கானை இளம் சி.ஐ.எஸ்.எஃப் காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய வலியுறுத்துவார். இது தொடர்பான காட்சிகள் இணையங்களில் வெளியாகி வைரலாக, சோம்நாத் மொஹந்தி என்ற அந்த சி.ஐ.எஸ்.எஃப் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.
https://www.instagram.com/viralbhayani/?utm_source=ig_embed&ig_rid=a322397e-a7c8-4542-8842-98cbd262a75d
சல்மான் கானின் பிரபலத்தை கண்டுகொள்ளாமல், நேர்மையாக தனது பணியை செய்ததாக இணையங்களில் நெட்டிசன்கள் ஏஎஸ்ஐ பொறுப்பில் உள்ள சோம்நாத் மொஹந்தியை கொண்டாடினர். ஊடகங்களிடம் இந்தச் சம்பவம் தொடர்பாக சோம்நாத் மொஹந்தி பேசியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், நேற்று ஊடகங்களில் இது தொடர்பாக பேசியதற்காக சோம்நாத் மொஹந்தியின் மொபைல் போனை மத்திய தொழிற்சாலை காவல் படை எனப்படும் சி.ஐ.எஸ்.எஃப் கைப்பற்றி கொண்டு, அவர் மீது நடவடிக்கை எடுத்ததாக தகவல் வெளியானது.
ஊடகங்களுடன் பேசக்கூடாது என்பதற்காக மொபைல் போனை கைப்பற்றியதாகவும் தகவல் வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சி.ஐ.எஸ்.எஃப் தலைமைக்கு எதிராக கண்டனங்கள் வெளியாகின.
இந்த நிலையில் ஏஎஸ்ஐ சோம்நாத் மொஹந்தி மீது நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்ட தகவல் பொய்யானது என சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறது. மேலும், சோம்நாத் மொஹந்தி மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக அவரை பாராட்டியதாகவும் சி.ஐ.எஸ்.எஃப் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக சி.ஐ.எஸ்.எஃப் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ``காவலர் சோம்நாத் மொஹந்தி மீது நடவடிக்கை எடுத்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை. தகுந்த ஆதாரங்கள் இன்றி, இதுபோன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கடைமையை நிறுவேற்றுவதில் மொத்த காவலர்களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்த அந்த அதிகாரிக்கு வெகுமதி அளிக்கப்பட்டது" என்று விளக்கம் கொடுத்துள்ளது.