95-வது ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அனுப்பப்படவுள்ள திரைப்படத்தை அறிவிக்கும் விதமாக பத்திரிகையாளர் சந்திப்பு இன்று தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பினில் இந்திய திரைப்பட சங்கத்தின் தேர்வு குழுவினர் கலந்துகொண்டு தேர்வு செய்த படத்தினை அறிவித்தனர்.
இந்த முறை பல மொழிகளில் இருந்து 13 சிறந்த திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பரிந்துரையின் கீழ் ஆஸ்கருக்கு அனுப்ப சொல்லி இந்தியில் இருந்து ‘பதாய் தோ’, ‘ராக்கெட்ரி’, ‘ஜூன்ட்’, ‘பிரம்மாஸ்த்ரா’, ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘அனெக்’ ஆகிய ஆறு படங்களும், தமிழில் பார்த்திபன் இயக்கிய ‘இரவின் நிழல்’ படமும், தெலுங்கில் ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘ஸ்தலம்’ ஆகிய இரு படங்களும், மலையாளத்தில் ‘அறியிப்பு’ படமும், திமாசாவில் (அசாம்) ‘செம்கோர்’ என்ற படமும், குஜராத்தியில் ‘செலோ ஷோ’ படமும், பெங்காலியில் ‘அபராஜிதோ’ என்ற படமும் என மொத்தம் பதிமூன்று படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தத் திரைப்படங்களில் இருந்து பரிசீலிக்கப்பட்டு இறுதியாக குஜராத்தி திரைப்படம் 'செலோ ஷோ' (தி லாஸ்ட் ஷோ) தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த சர்வதேச திரைப்பட ஆஸ்கருக்கான பிரிவில் இந்தியா சார்பில் அனுப்பத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பான் நிலன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ஒரு சிறுவனுக்கும் சினிமாவுக்குமான பிணைப்பைப் பற்றி பேசும் படமாக உருவாகியிருக்கிறது. கடந்த ஆண்டு இந்தப் பிரிவின் கீழ் தமிழ்த் திரைப்படமான ‘கூழாங்கல்’ அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பா. ஜான்சன்