தான் சட்டத்தை மதிப்பவன் என்றும் வரி பாக்கி எதுவும் வைக்கவில்லை என்றும் நடிகர் மகேஷ்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ மகேஷ்பாபு. கடந்த 2007-08-ம் ஆண்டுகளில் விளம்பர நிறுவன தூதுவராக இருந்து கிடைத்த வருமா னத்தின் சேவை வரியாக, ரூ.18.5 லட்சத்தை செலுத்தவில்லை என்று ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி ஆணையகம் அவரின் வங்கிக் கணக்கு களை முடக்கியது. வட்டி, அபராதம் உள்ளிட்டவை உட்பட அவர் ரூ.73.5 லட்சம் வரி பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தான் சட்டத்தை மதிப்பவர் என்றும் வரி பாக்கி வைக்கவில்லை என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார் மகேஷ்பாபு.
இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் ’ஜி.எஸ்.டி ஆணையகம் அறிக்கையின்படி கடந்த 2007-08-ம் ஆண்டில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கான ரூ.18.5 லட்சம் வரியை செலுத்தவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்போதைய காலகட்டத்தில் விளம்பர தூதர் சேவைக்கு வரி விதிக்கப்படவில்லை. 2010-ம் ஆண்டு ஜூலையில் இருந்துதான் அந்த சேவைக்கு வரி விதிக்கப்பட்டது. ஆனால் ஜி.எஸ்.டி ஆணையகம் எந்த முன் அறிவிப்பும் இன்றி எனது வங்கிக் கணக்கை முடக்கி இருக்கிறது. நடிகர் மகேஷ் பாபு, சட்டத்தை மதிக்கும் குடிமகன். அவர் வரி செலுத்தாமல் இருந்ததில்லை’’ என்று அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.