மார்ச் 27 முதல் எந்தப் படங்களையும் வாங்கி வெளியிடுவதில்லை என்ற முடிவை தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு எடுத்துள்ளது.
தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் கூட்டம் இன்று சென்னை நட்சத்திர விடுதியில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் வேறு சில காரணங்களால் கூட்டம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இதில் சென்னை, செங்கல்படு, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், திரைத்துறையில் நிலவி வரும் பிரச்னைகளை தீர்க்கும் வரை காலவரையின்றி வேலைநிறுத்தம் செய்வது உட்பட அதிரடியான இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திரைப்படங்களை விநியோகிப்பதற்காக மத்திய அரசு 10% டிடிஎஸ் பிடித்து வருகிறது. அதற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இந்தச் சங்கம், மார்ச் 27 முதல் திரைப்படங்களை விநியோகிப்பதை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. மேலும் இந்த வரியை அரசாங்கம் நீக்கும் வரை காலவரையின்றி இந்தப் போராட்டத்தை தொடர உள்ளதாகவும் கூறியுள்ளது.
சினிமா டிக்கெட்டுகளுக்கு விதிக்கப்படும் 12% ஜிஎஸ்டிக்கு மேல் விதிக்கப்படும் 8% நகராட்சி பொழுதுபோக்கு வரியை (எல்.பி.இ.டி) ரத்து செய்யுமாறு இந்தச் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஏனெனில் இந்த வரி திரைப்பட பார்வையாளர்களுக்கு ஒரு சுமையாக மாறியுள்ளது என்று அவர்கள் தரப்பு வாதமாக முன்வைத்துள்ளது. அதிக கட்டணத்தால் பலர் தியேட்டர்களுக்கு வருவதை தவிர்ப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர், மன்னன், ராஜமன்னர், பிரதாப் ராஜா, ஷாஹுல் ஹமீத் உள்ளிட்ட பல மாவட்ட விநியோக சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது இவர்கள் சார்பில் இயக்குநர் டி. ராஜேந்தர் பேசினார். அவர் பேசும் போது, “திரை உலகத்திலே பெரிய புழுக்கம் நிலவுகிறது. ஒரு பக்கம் ஜிஎஸ்டி. ஆனால், இதை பற்றி விவாதிக்க நாங்கள் வரவில்லை. ஒரு படம் எடுப்பதற்கு முன்பு 18 சதவீதம் வரி கட்டுவது எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. வெள்ளையர்கள் காலத்திலே போட்ட காப்பி ரைட் ஆக்ட் இருக்கிறது.
நாங்கள் கோடி கணக்கில் பணம் போட்டு படம் எடுக்கிறோம். ஜிஎஸ்டி கட்டுகிறோம். டிடிஎஸ் கட்டுகிறோம். வருமான வரிச் செலுத்துகிறோம். இத்தனையும் செய்தாலும் நாங்கள் பணம் போட்டு எடுத்த படத்தை திருட்டுத்தனமாக வெளியாவதை எங்களால் தடுக்க முடியவில்லை. சட்டம் இருந்தாலும் கூட அந்தச் சட்டத்தை நிறைவேற்ற யாரும் இல்லாத நிலை உள்ளது. வருகின்ற மார்ச் மாதம் டிடிஎஸ் கட்டிவிட்டால் எங்களின் நிலைமை மிக மோசமாக மாறிவிடும்.
ஒரு படத்தை பணம் போட்டு வாங்கி அதன் லாபம் என்ன என்று கணக்குப் போடுவதற்கு முன்னாலேயே எப்படி வரி கட்டுவது?. முன்கூட்டியே கட்டிய பிறகு கணக்குப் பார்த்து அதை அரசிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம் எனச் சட்டம் உள்ளது. ஆனால், முன் கூட்டியே கட்டி விட்டு எப்படி லாப கணக்கு பார்க்க முடியும்? ஆகவே டிடிஎஸ் சிஸ்டத்தில் நாங்கள் இருந்தால் தாங்க மாட்டோம். வாழ முடியாது. ஆகவே மார்ச் 27 ஆம் தேதியில் இருந்து எந்தப் படத்தையும் வாங்கி வெளியிடாமல் இருப்பதாக முடிவு செய்துள்ளோம்.” என்றார்.
விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘மாஸ்டர்’ ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே போல் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதால் திரை உலகம் பரபரப்பில் உள்ளது.