நமது சமுதாயம் பல்வேறு கலாச்சார அடுக்குளால் நெய்யப்பட்டது. இங்கு கலாச்சாரம் என்பதை தமிழ் கலாச்சாரம் என்றோ, இந்தியக் கலாச்சாரம் என்றோ சுருக்கிச் சொல்லவில்லை. மனித கலாச்சாரம் என்ற ஆதி பிரம்மாண்ட பார்வையிலிருந்து உலகைக் காணும் போது ஆயிரக் கணக்கான மதங்கள், இலட்சக் கணக்கான நம்பிக்கைகள் என அதன் பெருவெளியின் தூரம் எல்லையற்று நீண்டுகொண்டே போகிறது. நீங்களும் நானும் நிரந்தரமாக பற்றிக் கொள்ள முடியாத ஏதோ ஒன்றை துரத்திக் கொண்டே போகிறோம். ஆனால், உங்கள் பார்வையினை அங்குல அளவிற்குள் சுருக்கினால் அதற்குள் பெண்களை உடன் கட்டை ஏற்றியது, வெள்ளை அங்கிக்குள் மனித உணர்ச்சிகளை முடக்கியது என நம்மீது நாம் சுமத்திக் கொள்ள குற்றச்சாட்டுகள் நிறையவே இருக்கின்றன. அப்படி ஒரு கலாச்சார கத்தியால் சூறையாடப்பட்ட அப்பாவி மனிதர்களை பல்வேறு கோணங்களில் பதிவு செய்கிறது இந்தப் படம். இந்தியாவில் அதிகம் பேசப்படும் தெலுங்கு மொழியில் உருவாக்கப் பட்டிருக்கும் இப்படம் உங்கள் மீது எந்த சொந்த அபிப்ராயங்களையும் திணிக்கவில்லை மாறாக அது உங்களுக்குள் கேள்விகளை எழுப்பி விடைகளை அறிமுகம் செய்ய முயல்கிறது. 1976ஆம் ஆண்டு வெளியான நிமஞ்சனம் என்ற சினிமா குறித்துதான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.
பாரதியும் அவளது கணவனும் கிராமத்திலிருந்து எங்கோ வெளியூரில் வசிக்கின்றனர். பாரதியின் மாமனாரும் அவளது கணவரின் தந்தையுமான பெரியவரின் மரண செய்தி அறிந்து கிராமத்திற்கு வரும் அவ்விருவரும் தங்கள் கலாச்சார முறைப்படி இறந்தவரை அடக்கம் செய்துவிட்டு, மறுநாள் அஸ்தியினை எடுத்துக் கொண்டு காசியில் உள்ள கங்கை நதியில் கரைப்பது என முடிவு செய்கின்றனர்.
கிராமத்திலிருந்து இரயில் நிலையம் தொலைவு என்பதால் அவ்வூரில் உள்ள கோவிந்து என்ற மாட்டு வண்டிக்காரரை வரவழைக்கின்றனர். கோவிந்துவின் மாட்டுவண்டியில் இரயில் நிலையம் வரை செல்லும் அவர்கள். பின் அங்கிருந்து காசிக்கு சென்று கணவனும் மனைவியுமாக வேத மந்திரங்கள், சாஸ்திர நம்பிக்கைகள் என சகல சடங்குகளும் செய்து அஸ்தியை கங்கையில் கரைக்கின்றனர்.
அஸ்தியை கரைத்துவிட்டு கணவனும் மனைவியும் கங்கைக்குள் மூழ்கி எழும் போது மனைவி பாரதி மட்டும் நதியோடு போய் விடுகிறாள். பிறகு அங்கிருந்த பார்ப்பனர்கள் சிலர் பாரதியின் கணவனிடம் “கங்கை உன் மனைவியை எடுத்துக் கொண்டுவிட்டது கங்கையில் மூழ்கி சாக வேண்டும் என்பது பலரது ஆசையாக இருந்தாலும் எல்லோருக்கும் அது கைகூடுவதில்லை, ஆனால் உன் மனைவி பாக்யவதி, புனித நீரில் உயிர் நீத்தாள் நீ குழப்பிக் கொள்ளாமல் ஊருக்குப் போ” என அவனது மனதை தேற்றி வழி அனுப்பி வைக்கிறார்கள்.
காட்சியானது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்ட இரயில் நிலையத்தை அடைகிறது, அங்கு அவர்களை அழைத்துச் செல்லக் காத்திருந்த வண்டிக்காரர் கோவிந்து, தனியாக வந்த பாரதியின் கணவர் மூலமாக பாரதி நதியோடு போய்விட்டதை அறிந்து வேதனைப் படுகிறார். அவர்கள் மாட்டு வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். கோவிந்து தன் மனதுக்குள் ஒரு சம்பவத்தை பற்றி நினைத்துப் பார்க்கிறான்.
ப்ளாஸ்பேக் காட்சி : “பாரதியையும் அவளது கணவனையும் காசிக்கு செல்ல வீட்டிலிருந்து இரயில் நிலையம் அழைத்து சென்ற போது வழியில் பாரதி மாட்டு வண்டியிலேயே உறங்கினாள் அப்போது அவளது சேலை சரிந்ததை பார்த்த கோவிந்துவிற்கு மனச் சபலம் ஏற்படுகிறது. அவன் சூழ்ச்சி செய்து அஸ்தி கொண்டு செல்லப்பட்ட பானையினை மறைத்துவைத்து பாரதியின் கணவனை அங்கிருந்து தந்திரமாக போகச்செய்கிறான். அவன் திரும்பி வருவதற்குள், வண்டிக்காரன் கோவிந்து, பாரதியை அந்த பெரு மரத்தின் அடியில் வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துவிடுகிறான்.”
இப்போது காட்சி நிகழ்காலத்தில் நிற்கிறது. தன்னால் தான் பாரதி நதியில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டாள் என்ற எண்ணமானது கோவிந்துவை குற்றணர்ச்சியின் எல்லைக்கு கொண்டு போகிறது. அவனது கைகால்கள் வியர்க்கிறது. அவனால் அந்த உண்மையினை வெளியே சொல்ல முடியவில்லை. மாட்டு வண்டியானது சம்பவம் நடந்த மரத்தை கடக்கும் போது கோவிந்து நிலை குழைந்து கீழே சரிந்து இறந்து போகிறான். அவன் ஏன் இறந்தான் என்பதை அறியாத பாரதியின் கணவன் கோவிந்துவிற்காக வருந்துகிறார்.
இந்த படத்தில் யார் குற்றவாளி, காசியில் தான் அஸ்தியை கரைக்க வேண்டும் என கற்றுக் கொடுத்த நம்பிக்கைகளா…? மாற்றான் மனைவி மேல் ஆசை கொண்ட கோவிந்துவா…? கோவிந்துவிற்கு ஒத்திசைந்த பாரதியா…? இல்லை கற்பு என்றால் இது தான் என கற்பித்து வைத்திருக்கும் நமது நம்பிக்கைகளா…? இல்லை அந்த சூழ்நிலையா…? இப்படி பதில் சொல்ல முடியாத கேள்விகளை எழுப்புகிறது இப்படம். இத்திரைப்படம் வெளியான 1976ல் பெரும் விவாதத்தையும் சர்ச்சையினையும் கிளப்பியது. தற்போது நிமஞ்சனம் யூடியூபில் காணக் கிடைக்கிறது. மஞ்செரி எஸ் ஈஸ்வரன் எழுதிய இந்தக் கதையினை பி.எஸ்.நாராயணா இயக்கினார் ப்ரேம் பிரகாஷ் மற்றும் பட்டாபிராம ரெட்டி ஆகிய இருவரும் இணைந்து நிமஞ்சனத்தை தயாரித்தனர்.
படத்தின் நாயகி பாரதியாக நடித்திருப்பவர் புகழ்பெற்ற நடிகை சாரதா. நிமஞ்சனம் உட்பட சிறந்த நடிகைக்கான தேசியவிருதை மூன்றுமுறை பெற்ற சாரதா, ஆந்திராவில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். தமிழில் ‘குங்குமம்’ என்ற சினிமாவில் இவரை அறிமுகம் செய்து வைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன்.
இச்சித்திரத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் புரிந்து கொள்ள முடியும் என்பதே இப்படத்தின் சிறப்பு. நிமஞ்சனம் என்கிற இந்த சினிமாவை இன்றைய காலகட்டத்தோடு எப்படி பொறுத்திப் பார்க்கலாம் எனக் கூற இயலவில்லை. ஆனால் 1976ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் இப்படியொரு சினிமா உண்மையில் வியக்கத்தக்க ஒன்று.
- சத்யா சுப்ரமணி