இசைக்கச்சேரி ஒன்றில் பாடிக்கொண்டிருந்த நிக் ஜோனஸ் மீது, திடீரென லேசர் லைட் பட்டுள்ளது. இதனால் மேடையிலிருந்து வேகவேகமாக அவர் ஓடிய காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பிரபல பாடகராக வலம்வருபவர் நிக் ஜோனஸ். இவர் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் ஆவார். இவர் தனது சகோதரர்களான கெவின் மற்றும் ஜோவுடன் இணைந்து ‘ஜோனஸ் பிரதர்ஸ்’ என்ற இசைக்குழு ஒன்றை நடத்திவருகிறார். இதன்மூலம், உலகின் பல பகுதிகளுக்கு சென்று பாடல்கள் பாடி இசைக்கச்சேரி நடத்திவருகிறார் ஜோனஸ்.
இவர் தற்போது வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ‘தி டூர்’ (The Tour) என்ற தலைப்பில் உலகளவிலான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.
இதனொரு பகுதியாக செக் குடியரசின் தலைநகரில் ப்ராக் நகரில் உள்ள ஓ2 அரங்கில் கடந்த செவ்வாயன்று (நேற்று முன்தினம்) தனது குழுவுடன் இசைக்கச்சேரியை நடத்தியுள்ளார் நிக் ஜோனஸ். பிரம்மாண்டமாக, மக்களின் ஆரவாரத்தோடு தொடங்கிய இக்கச்சேரியில் மேடையில் பாடிக்கொண்டிருந்த ஜோனஸ் மீது திடீரென லேசர் லைட் பட்டுள்ளது.
இதனை கண்ட நிக் ஜோனஸ் நிகழ்ச்சியை முடித்துவிடும்படி கையில் சைகையை காட்டி, மேடையிலிருந்து அதிவேகமாக நிகழ்ச்சி நடக்கும் அரங்கை விட்டு வெளியேறினார். தனது பாதுகாப்பு கருதி அவர் வெளியேறியதாக கூறப்படுகிறது. இருப்பினும், நிக் ஜோனஸின் சகோதரர்கள் ஜோ மற்றும் கெவின் மேடையில் இருந்தனர். இதனையடுத்தும், நிக் ஜோனஸை நோக்கி லேசர் குறிவைத்த நபரை அடையாளம் கண்டு அவ்விடத்திலிருந்து அகற்றியுள்ளனர். இதன்பின்னர், நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளத்தில் பயனர் ஒருவரால் பகிரப்பட்டதை அடுத்து, தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள், “அவர் திடீரென ஓடுவதை பார்ப்பதற்கு திகிலாக இருக்கிறது. அவர் நலமாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், இது தொடர்பாக, நிக் ஜோனஸ் எந்த பதிலோ விளக்கமோ இதுவரை அளிக்கவில்லை.