நடிகை கீர்த்தி சுரேஷ் “கரப்பான் பூச்சியை” மையமாகக் கொண்டு கவிதை ஒன்றை சொந்தமாகவே எழுதி, வாசித்தது பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இயக்குநர் லிங்குசாமியின் " லிங்கூ-அய்க்கூ" புத்தக வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், கவிஞர் பிருந்தா சாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராதவிதமாக நடிகை கீர்த்திசுரேஷ் சொந்தமாகவே ஒரு கவிதையை எழுதி வந்து வாசித்தார். அப்போது அனைவரும் கைதட்டி கீர்த்தி சுரேஷை உற்சாகப்படுத்தினர். மேலும் சொந்தமாகவே கவிதை எழுதிய கீர்த்தி சுரேஷூக்கு பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர். “ கரப்பான பூச்சியை ”மையமாக கொண்ட அந்தக் கவிதைதான் தனக்குப் பிடித்த கவிதை என்றும் கீர்த்தி சுரேஷ் கூறினார்.
தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் தமிழ்ப் பேச தெரியாமலும் அல்லது பேசத் தெரிந்தும் பேச தயக்கம் காட்டும் இக்காலத்தில் கீர்த்தி சுரேஷ் தமிழில் கவிதை ஒன்றை கூறியது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்குப் பிடித்த தமிழ்க் கவிதை பற்றி கீர்த்தி சுரேஷ் பேசியது தங்களுக்கும் ஆச்சரியமாக இருந்ததாக நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர்களும் தெரிவித்தனர்.