சினிமா
யாரு மா.கா.பா ஆனந்தா இது? - சந்திரபாபு ஸ்டைலுக்கு மாறிய இளம் நடிகர்!
யாரு மா.கா.பா ஆனந்தா இது? - சந்திரபாபு ஸ்டைலுக்கு மாறிய இளம் நடிகர்!
தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகருமான மா.கா.பா. ஆனந்த், அந்தக் காலத்தில் உச்ச நடிகராக வலம் வந்த சந்திரபாபுவின் குச்சி மீசை ஸ்டைலுக்கு மாறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக வலம் வந்தவர் மா.கா.பா ஆனந்த். சின்ன திரையில் கிடைத்த பெரும் வரவேற்பு அவரை வெள்ளித்திரைக்குக் கொண்டு சென்றது. 2014 ஆம் ஆண்டு வெளியான வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலம் திரை வாழ்க்கைக்குள் அறிமுகமானார். இவரது நடிப்பில் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் இவர் நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் சேர்ந்து நடித்திருந்தார்.
நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திரைத்துறையில் ஒரு வேலையும் நடைபெறவில்லை. அனைத்து நட்சத்திரங்களும் வீட்டிலேயே முடங்கிப் போய் உள்ளனர். இந்த நேரத்தில் பல திரை நட்சத்திரங்கள் கொரோனாவுக்கு எதிராக விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுவது, வீட்டில் ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்வது, வீட்டுத் தோட்டம் போடுவது எனப் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி செய்யும் வேலைகளை அவர்கள் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிட்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நடிகை சிம்ரன் அதிக தகவல்களைப் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், வீட்டில் உள்ள நேரத்தில் தனது கெட் அப்பை மாற்றி பலருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் மா.கா.பா ஆனந்த். அவர் செய்து கொண்ட படிப்படியான கெட் அப் மாற்றத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் அவர் அச்சு அசல் பழம்பெரும் நடிகர் சந்திரபாபு போலவே உள்ளார். தமிழ் சினிமாவில் ஆடல், பாடல், நடிப்பு எனப் பல திறமைகளைக் கொண்டிருந்தவர் நடிகர் சந்திரபாபு. அவரைப் போலவே ஆனந்த்தும் கருப்பு வெள்ளை காலத்தைக் குறிக்கும் விதமாக முகமாற்றத்தைச் செய்து கொண்டுள்ளார். அவரது முக பாவங்களும்கூட சந்திரபாபுவைப் போலவே அந்தப் புகைப்படங்களில் பதிவாகியுள்ளது. குறிப்பாக மீசையைக் கூட சந்திரபாபு ஸ்டைலுக்கு ஏற்றதைப்போல் பென்சில் மீசையாக மாற்றியுள்ளார்.
இந்தப் படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை சந்திரபாபுடன் சேர்த்துப் பாராட்டி வருகின்றனர். 1940களில் உலகப் புகழ் வாய்ந்த நடிகராக இருந்த சார்லி சாப்ளினைப் பார்த்து 1950-60களில் சந்திரபாபு தமிழ் சினிமாவில் அதனை பின் பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.