உலகம் முழுக்க ஓடிடி தளத்தில் அதிக பேரால் பார்க்கப்பட்ட ‘ஸ்க்விட் கேம்’ வெப் சீரிஸின் சீசன் 2 -வை தயாரிக்கவிருக்கிறது நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம்.
கடந்த செப்டம்பர் 17 அம் தேதி கொரிய இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் இயக்கத்தில் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது ‘ஸ்க்விட் கேம்’. விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் வெளியான சில தினங்களிலேயே சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்றது. யூகிக்கவே முடியாத க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டால் ‘ட்விட்ஸ்ட் கேம்’ தொடர் என்று சொல்லும் அளவுக்கு பார்வையாளர்களிடம் ஆச்சர்யமூட்டியது. இந்தத் தொடரை தற்போது வரை 13 கோடிக்கும் அதிமானவர்கள் பார்த்துள்ளனர் என நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.
ஒன்பது எபிசோடுகளைக் கொண்ட இத்தொடரின் ஒவ்வொரு எபிசோடுக்கும் 18 கோடி ரூபாய் என சுமார் 180 கோடி ரூபாய் பொருட்செலவில் ’ஸ்க்விட் கேம்’ உருவாக்கப்பட்டது. ஆனால், அந்தத் தொடருக்கு சர்வதேச அளவில் கிடைத்த வரவேற்பால் தற்போது வரை 6700 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், புதிய பயனர்களின் எண்ணிக்கையும் 30 லட்சமாக உயர்ந்திருப்பதாக நெட்பிளிக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,விரைவில் ‘ஸ்க்விட் கேம்’ சீசன் 2 வை தயாரிக்க திட்டமிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.