IC 814: The Kandahar Hijack வெப் தொடரில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களுக்கு ஹிந்துக்களின் பெயர்களை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‘பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு IC-814 விமானக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களின் புனைப்பெயர் எனக்கூறி ஹிந்துக்களின் பெயர்களை எப்படி வைக்கலாம்?’ என நூற்றுக்கணக்கான சமூக ஊடக பயனர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நெட்பிளிக்ஸின் இந்தியப் பிரிவு உள்ளடக்க தலைவர் மோனிகா ஜெர்கில்லுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை நோட்டீஸ் பிறப்பித்தது.
இதையடுத்து, மோனிகா ஜெர்கில் தலைமையிலான குழுவினர் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை செயலர் சஞ்சய் ராஜு வை சந்தித்து விளக்கம் அளித்தனர். தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், “பயங்கரவாதிகளின் உண்மை பெயர்கள் IC814 தொடரின் ஆரம்பத்திலேயே வெளியிடப்படும்” எனக் குறிப்பிட்டனர்.
முன்னதாக கடந்த 1999ஆம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து டெல்லி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகருக்கு கடத்திச் சென்றனர்.
அங்கு விமான பயணிகளை பிணைக் கைதிகளாக வைத்துக்கொண்டு, இந்திய சிறையில் உள்ள மசூத் அசார் உள்ளிட்ட பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர். அதன்பேரில், 3 பயங்கரவாதிகளும் விடுவிக்கப்பட்ட பிறகே, விமானப் பயணிகளை விடுவித்தனர்.