16வது ஆண்டில் குரு: மடியில் உட்கார்ந்து செல்ல டிக்கெட் கிடையாதா? IRCTCஐ கேட்ட Netflix!

16வது ஆண்டில் குரு: மடியில் உட்கார்ந்து செல்ல டிக்கெட் கிடையாதா? IRCTCஐ கேட்ட Netflix!
16வது ஆண்டில் குரு: மடியில் உட்கார்ந்து செல்ல டிக்கெட் கிடையாதா? IRCTCஐ கேட்ட Netflix!
Published on

மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மாதவன், வித்யா பாலன் என பலரது நடிப்பில் உருவான குரு படம் வெளியாகி இன்றோடு 16 ஆண்டுகள் ஆகிறது. 2007ம் ஆண்டு வெளியான இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார்.

இந்தியில் உருவானாலும் தமிழிலும், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு குரு திரைப்படம் வெளியிடப்பட்டது. தொழிலதிபர் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை கருவாக கொண்டதுதான் குரு படம் என தெரிவிக்கப்பட்டாலும் அதனை மறுத்ததோடு, முழுக்க முழுக்க கற்பனையான கதைதான் குரு என்றும் மணிரத்னம் விளக்கியிருப்பார்.

படத்தில் ஐஸ்வர்யா ராயின் சுஜாதா கேரக்டர் வீட்டை விட்டு செல்வதாகட்டும், குரு-சுஜாதா இடையேயான காதல், பாடல் காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களுக்கு ஆல் டைம் ஃபேவரைட்டாகவே இதுகாறும் இருக்கிறது.

அண்மையில் கூட நன்னாரே பாடலின் “விடைகொடு சாமி விட்டு போகின்றேன்” என்ற பகுதியை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம் போட்டு ட்ரெண்ட் செய்திருந்தார்கள். இப்படி இருக்கையில், குரு படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் படத்துடனான அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

இப்படி இருக்கையில், ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்த பிறகு வெளியூருக்கு செல்லும் அபிஷேக் பச்சனை பார்த்து “என்னையும் கூப்பிட்டு போறீங்களா” என கேட்க அதற்கு உன்கிட்ட டிக்கெட் இல்லையே என அபிஷேக் சொல்வார். இதற்கு பதிலாக, “உங்க மடியில உட்கார்ந்து வர டிக்கெட் வேணுமா” என ஐஸ்வர்யா கூறுவார்.

இந்த காட்சியை குறிப்பிட்டு நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் ட்விட்டர் பக்கத்தில் “இந்த காட்சிக்கு இனிய வாழ்த்துகள்” என முதலில் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் அதே பதிவை ரீட்வீட் செய்த நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா, குரு பட காட்சியை குறிப்பிட்டு “மடியில் உட்கார்ந்து செல்ல டிக்கெட் தேவையில்லை என்பதை உறுதிபடுத்த முடியுமா?” என IRCTC-ஐ டேக் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ட்விட்டர் பதிவைக் கண்ட நெட்டிசன்கள், “தட்கல் நேரமாக இருப்பதால் சர்வர் சரியாக இல்லை” என்றும், “கொஞ்சம் பொறுங்கள் page is loading” என்றும், “அது வயதை பொருத்துதான். 5 வயதுக்கு கீழ் இருந்தால் மடியில் வைத்துக் கொள்ளலாம். டிக்கெட் தேவையில்லை.” என்றெல்லாம் கிண்டலடித்து கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com