சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் குடிமகன்களிடையே சமத்துவத்தை வலியுறுத்தும் அரசமைப்பு சட்டப்பிரிவு 15, அதாவது ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.
சாதி பெருமைகள் பேசி வெளியான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். ஆனால் சமீப காலமாக வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களின் திரைப்படங்கள் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்துக் காட்டுவதாக உள்ளன. இந்த இயக்குநர்கள் வரிசையில் இயக்குநர் அருண்ராஜா காமராஜும் இணைந்திருக்கிறார்.
சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. சமூகத்தில் இருக்கும் சாதிய பாகுபாடுகள் குறித்து அதிகம் அறியாத காவல்துறை அதிகாரியாக உதயநிதி ஸ்டாலின் வருகிறார். கதைக்களமாக திகழும் ஊரில் சாதியின் காரணமாக தீண்டாமையில் ஈடுபடும் மக்களின் செயல் அவரை அதிர வைக்கிறது.
பட்டியலினத்தவர்கள் எவ்வாறெல்லாம் ஒடுக்கப்படுகின்றனர் என்பதை மிக அழுத்தமாக காட்சிப்படுத்தியுள்ளது படம். பட்டியலின மாணவிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சுற்றியே திரைப்படம் நகர்கிறது. சாதியை காரணம் காட்டி இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கிடைக்குமா என்பதே படத்தின் கதை. சமத்துவத்தை வலியுறுத்தி வெளியாகி வரும் தமிழ்த் திரைப்படங்களில் அடுத்தகட்ட நகர்வாக அமைந்துள்ளது நெஞ்சுக்கு நீதி திரைப்படம்.