'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படம் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகும் நிலையில், அப்படத்தின்போது எடுத்த புகைப்படங்களை நடிகை சுஹாசினி மணிரத்னம் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் மகேந்திரன் இயக்கி, 1980 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி வெளியான படம் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே'. நடிகர்கள் மோகன், பிரதாப் கே போத்தன், சரத் பாபு ஆகியோர் நடித்த இந்தப் படத்தில், மையக் கதாபாத்திரத்தில் நடிகை சுஹாசினி நடித்தார். இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தைத் தயாரித்தவர், ராஜகோபால் செட்டி.
இந்தப் படம் வெளிவந்து 40 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், இதுதொடர்பாக நடிகை சுஹாசினி மணிரத்னம் தனது இன்ஸாடாகிராம் இரு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இவை 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படப்பிடிப்போது எடுக்கப்பட்டவை. ஒன்றில் தனியாகவும், மற்றொன்றில் நடிகர்கள் மோகன், பிரதாப் போத்தன் ஆகியோருடனும் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படங்களுள் ஒன்று 'நெஞ்சத்தைக் கிள்ளாதே'. இப்படம் குறித்து ஏற்கெனவே அளித்த பேட்டி ஒன்றில், "அப்போது நான் ஒளிப்பதிவு துறையில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அருணாச்சலம் ஸ்டூடியோவில் 'உதிரிப்பூக்கள்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. எனது தந்தை என்னை அங்கு அழைத்துச் சென்றார். என்னுடன் பேசிக்கொண்டிருந்த இயக்குநர் மகேந்திரன் திடீரென்று லைட்டிங் செய்யச் சொன்னார். நானும் செய்தேன்.
அதன் பின்னர் அவரது 'ஜானி படத்தில் துணை ஒளிப்பதிவாளாராக பணியாற்றினேன். 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தில் முதலில் நடிகை பத்மினி கோலாபுரிதான் நடிக்க இருந்தார். ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க இயலாமல் போனது. அதனால், அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. உடனே, கமலிடம் இது குறித்து கேட்டேன். அதற்கு அவர், 'உனக்கு விருப்பம் இருந்தால் நீ நடிக்கலாம்' என்றார். அதன் பின்னர் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்" என்று சுஹாசினி கூறியிருந்தது நினைகூரத்தக்கது.
'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்திற்காக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் சுஹாசினிக்கு மாநில அரசு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.