லேடி சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாராவின் முதல் படம் ரிலீஸாகி 14 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன. இதனையடுத்து நயன்தாரா ரசிகர்கள் ட்விட்டரில் #14YearsOfNayanism என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இயக்குநர் சத்யன் அந்திக்காட் தன்னுடைய ‘மனசினக்கரே’ மலையாளப் படத்தில் நடிகையாக நயன்தாராவை அறிமுகப்படுத்தினார். 2003ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் இந்தப் படம் ரிலீஸானது. இந்தப் படம் ரிலீஸாகி நேற்றுடன் 14 ஆண்டுகள் முடிந்து இன்று 15-ஆவது ஆண்டு தொடங்குகிறது.
தொடர்ந்து மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நயன்தாரா, ஹரி இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ‘ஐயா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தார். தொடர்ந்து சந்திரமுகி, கஜினி உள்பட பல வெற்றி படங்களில் நடித்து கோலிவுட்டின் முதன்மை நாயகியாக மாறினார். தமிழ்த் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி என்ற பெயரும் நயன்தாராவுக்கு கிடைத்தது. இடையில் பிரபுதேவா மீது கொண்ட காதலால் தனது திரையுலக வாழ்க்கையை விட்டு விலகுவதாக அறிவித்த நயன்தாரா, அதன்பின் அந்த காதல் முறிந்துபோன காரணத்தில் மீண்டும் திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அப்போதும் ரசிகர்கள் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தனர்.
சர்ச்சை நாயகி, காதல் நாயகி என்ற பாப்புலாரிட்டியுடன், ரசிகர்கள் மத்தியில் நயன்தாராவுக்கு எப்போதுமே முதலிடம்தான். பொதுவாகவே தற்போது வரும் கதாநாயகிகளின் திரையுலக வாழ்க்கை ஐந்தாறு ஆண்டுகளுக்குள் ஓரங்கட்டப்பட்டு வருகிறது. ஆனால் நயன்தாராவே அசால்டாக 14 ஆண்டுகளாக வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார். டாப் ஹீரோக்களுக்கு இணையாக நயன்தாராவின் புகழும் உச்சத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான அறம் படம் அவருக்கு இன்னும் கூடுதல் ரசிகர்களை கூட்டியது. சமீபத்தில் வெளியான வேலைக்காரன் படமும் நயனுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
நயன்தாராவின் முதல் படம் ரிலீஸாகி 14 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #14YearsOfNayanism என்ற ஹேஷ்டேக்கையும் அவர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நயன்தாராவின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனும் நயன்தாராவுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.