நயன்தாராவின் திரைப்பயணம் மற்றும் திருமண வாழ்க்கையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆவணப்படமாக தயாரித்துள்ளது. நயன்தாரா BEYOND THE FAIRY TALE எனும் தலைப்பில் உருவான அந்த ஆவணப்படம், கடந்த 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்தநாளன்று வெளியானது.
இத்தகைய சூழலில்தான், தனுஷுக்கு எதிராக இஸ்டாவில் நவம்பர் 16-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்ட நயன்தாரா, சினி உலகில் ஒரு புயலைக் கிளப்பினார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படம் தனுஷின் தயாரிப்பில் உருவானது. அந்த படத்தில் இருந்துதான் விக்னேஷ் சிவன் - நயன் காதல் மலர்ந்தது என்பதால், அந்த படப்பிடிப்பில் இருந்து BTS (Behind the Scene) காட்சியை இந்த ஆவணப்படத்தில் பயன்படுத்தி உள்ளார்கள். இதற்காக NOC கேட்டு தயாரிப்பாளரான தனுஷுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அவர் மறுத்துள்ளார். மேலும் காட்சிகளை பயன்படுத்த 10 கோடி ரூபாய் செலுத்தும்படி கேட்டிருக்கிறார்.
இதை நயன்தாரா குற்றம்சாட்டியிருந்தார். தனுஷின் பழிவாங்கல் நடவடிக்கை எனக்கூறிய நயன், அதனால் தானும் தன் கனவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கை பெரும் விவாதப்பொருளானது. நயன்தாராவின் பதிவுக்கு பல நடிகைகளும் விருப்பக்குறிகளை இட்டதும் பேசுபொருளானது.
நயன்தாராவுக்கு ஆதரவாகும், தனுஷுக்கு ஆதரவாகவும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இத்தகைய பரபரப்பான சூழலுக்கு மத்தியில்தான் Nayanthara: BEYOND THE FAIRY TALE வெளியானது.
இந்நிலையில்தான் நயன்தாரா மீண்டும் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நமது Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரைப் பயணத்தில், நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றியமையாதது. அதனால், அந்த படங்கள் குறித்த நினைவுகளும், ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என உங்களை அணுகியபோது, எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன்” என்று குறிப்பிட்டு தமிழ், தெலுங்கு, மலையாள திரைத்துறையைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நயன்தாரா. குறிப்பாக சிரஞ்சீவி, ராம்சரண், விஜயன் உள்ளிட்ட திரைப் பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அவர்.
இதில், நடிகர் தனுஷ் பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது. கடைசியாக, “நம் பயணம் என்றென்றும் தொடரும்; பெருமகிழ்வுடன் நயன்தாரா” என அந்த அறிக்கை முடிக்கப்பட்டுள்ளது.