நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 18 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், அதன் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த 2015-ல் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றிய போது நயன்தாராவுக்கும் அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது.
அதன்பின் சுமார் 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் பிரம்மாண்டமாகவும், ஆடம்பரமாகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.
அந்த திருமண நிகழ்வை நெட்ஃபிளிக்ஸில் வெளியிட 25 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்ததாக கூறப்பட்ட நிலையில், அது எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அடுத்து எழுந்தது.
'NAYANTHARA BEYOND THE FAIRLYTALE' என்கிற பெயரில் அந்த ஆவணப்படமானது உருவானது. அது வருகின்ற நவம்பர் 18ம் தேதி அதாவது நயன்தாராவின் பிறந்தநாளன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அதன் டிரைய்லரை நெட்ப்ளிக்ஸ் தற்போது வெளியாகி ரசிகர்களை குஷி மோடுக்கு கொண்டு சென்றுள்ளது.
இந்த ஆவணப்படமானது நயன்தாராவின் திருமணம் மட்டுமன்றி அவரது சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயாகியாக அவர் உயர்ந்தது வரை அவர் எதிகொண்ட ஏற்ற இறக்கங்களை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இடையிடையே நயன்தாராவின் திருமணப் புகைப்படம் மற்றும் வீடியோக்களும் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், நயன்தாராவை பற்றி அவருடைய தாய் மற்றும் திரையுலக பிரபலங்கள் ராதிகா, நெல்சன், அட்லீ, உபேந்திரா, டாப்ஸி, நாகர்ஜுனா உள்ளிட்ட பலரும் பேசியுள்ளதை ட்ரெய்லரில் காண முடிகிறது. இடையே கணவர் விக்கியும், தன் மனைவி குறித்து காதலொடு பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.